ஊர் கூடி உழவு...! தலைமுறைகளைக் கடந்தும் தழைத்தோங்கும் விவசாயம்

மரபு கலாசாரங்களும் வாழ்வியல் நெறிகளும் மாற்றம் காணும் மானுடவியலில், இன்னும் மாண்புற செழிக்கும் பழைமை மாற உழவு களப் பணியில் உறவுகள் சங்கமிக்கும் களமாக அவதானப்பட்டி கிராமம் திகழ்கிறது.
ஊர் கூடி உழவு...! தலைமுறைகளைக் கடந்தும் தழைத்தோங்கும் விவசாயம்

மரபு கலாசாரங்களும் வாழ்வியல் நெறிகளும் மாற்றம் காணும் மானுடவியலில், இன்னும் மாண்புற செழிக்கும் பழைமை மாற உழவு களப் பணியில் உறவுகள் சங்கமிக்கும் களமாக அவதானப்பட்டி கிராமம் திகழ்கிறது.

இயந்திர வாழ்வியலின் ஏணிப்படிகளை உச்சம் தொட முடியாமல்  கூட்டு குடும்ப வாழ்க்கை மறைந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி அருகே பல தலைமுறைகளாக விவசாயத்தில் உற்றார், உறவினர்கள் ஒன்று கூடி தங்களது பங்களிப்பை அளித்து வரும் ஒரு அதிசய கிராமமாக அவதானப்பட்டி கிராமம் திகழ்கிறது.

வேளாண்மை நமது நாட்டின் முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில், நமது கலாசாரத்தின் வெளிப்பாடாக கூட்டுக் குடும்பம் இருந்து வந்தது. கூட்டுக் குடும்பத்தின் தலைவர் மற்றும் அவரது உறவினர்களான சித்தப்பா, மாமன், மச்சான், அவர்களின் வாரிசுகள், பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்று கூடி விழா போன்று விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பொருளாதார பரிணாமம், கடும் வறட்சி போன்ற காரணங்களால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் வாரிசுகள் வாழ்வாதாரம் தேடி மாற்று பாதையில் செல்லத் தொடங்கினர். இதையடுத்து கூட்டுக் குடும்பம் சிதைந்தது.

இத்தகைய சூழ்நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி கிராமத்தில் உறவினர்கள் பங்களிப்புடன் பல தலைமுறைகளாக தொடர்ந்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவதானப்பட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமை போர்த்தியது போல் பச்சை பசேல் என காட்சி அளிக்கும். கால்வாய் பாசனம் மூலம் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு இரண்டு போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விவசாயம் செய்வோர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர். ஒவ்வொரு ஆண்டும் நாற்று நடும் பணி தொடங்கியவுடன் அத்தை, மாமா, மச்சான், தம்பி, அண்ணன், சித்தப்பா, பெரியப்பா என உறவினர்கள் ஒன்று கூடி நாற்று நடவு பணியில் ஈடுபடுகின்றனர். பெரியப்பாவின் விளை நிலத்தில் நடவு பணியில் ஈடுபடும் உறவினர்கள், அடுத்த அனைத்து உறவினர்களும் ஒன்று கூடி மற்றொரு உறவினரின் விளை நிலத்தில் நாற்று நடவு பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு திட்டமிட்டு அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் தேர் திருவிழா போல் விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு வாரத்திலேயே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நாற்று நடவு பணியை நிறைவு செய்கின்றனர். அதேபோல், அறுவடை பணியையும் ஒன்று கூடி மேற்கொள்கின்றனர். 

அவதானப்பட்டியைச் சேர்ந்த திலகவதி (35) என்ற பெண் விவசாயி கூறும்போது, பல தலைமுறைகளாக  அவதானப்பட்டி கிராமத்தில் உறவினர்கள் ஒன்று கூடி விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அவதானப்பட்டியைச் சுற்றி உள்ள நெக்குந்தி, சின்னமுத்தூர், நேருபுரம், சிப்பாயூர், பனந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெல் நாற்று நடவு, அறுவடை போன்ற பணிகளை மேற்கொள்வோம். எங்களிடம் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விவசாயப் பணியில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இந்தப் பணியில் ஈடுபடுகிறோம்.  தற்போது அருகில் உள்ள கிராமத்திலிருந்து எனது தம்பி, அறுவடை பணிக்காக வந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நெக்குந்தியைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி(57) தெரிவித்தது: கடந்த காலங்களில் உறவினர்கள் ஒன்று கூடி விவசாயப் பணிகளில் ஈடுபடுவது திருவிழா போல இருக்கும். வறட்சியின் காரணமாக பாம்பே, கல்கத்தா, பெங்களூரு போன்ற அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றவர்கள், நெல் நாற்று நடவு, அறுவடை பணி காலங்களில் தங்களது கிராமத்துக்கு திரும்புவது வழக்கம். தற்போதைய நிலையில், விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் உறவினர்கள் ஒன்று கூடி விவசாயப் பணிகளில் ஈடுபடுவது  ஆரோக்கியமானதாக உள்ளது. ஆனால், தற்போது இந்த மரபு மெல்ல குறைந்து வருகிறது என வருத்தத்துடன் தெரிவித்தார். 

இருந்தாலும், தங்களது குடும்பத்துக்குள் இந்த பணி தொடர்ந்து நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.  பல தலைமுறைகளாக  உறவினர்கள் ஊர் கூடி விவசாயப் பணியில் ஈடுபடுவது நமது கலாசாரத்தை கட்டிக் காக்கும் கிராமமாக அவதானப்பட்டி கிராமம் திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com