செவிலியர்கள் போராட்டம் நடந்து வரும் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 144 தடை உத்தரவு!

தமிழகம் முழுவதிலும் இருந்து செவிலியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடந்து வரும் சென்னை டி எம் எஸ் வளாகத்தில் தற்பொழுது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செவிலியர்கள் போராட்டம் நடந்து வரும் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 144 தடை உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதிலும் இருந்து செவிலியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடந்து வரும் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தற்பொழுது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 -ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் செவிலியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திடவும், காலமுறை ஊதியம் வழங்கிடவும் வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை முதலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து டிஎம்எஸ் வளாகத்தில் திங்கள்கிழமை-செவ்வாய்க்கிழமை நள்ளிரவிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.  

இதனிடையில் செவிலியர்களில் சிலர் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு செவிலியர்களின் 90 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அரசு செவிலியர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதைத் தொடர்ந்து சில செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால், இன்னும் பலர் கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும் வரை தொடரும் என அறிவித்து ஏராளமான செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் நடந்து வரும் சென்னை டி எம் எஸ் வளாகத்தில் தற்பொழுது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த வளாகத்தில் பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் தவிர அனைவரும் வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி செவிலியர்களின் வழக்கறிஞர்கள், அவர்களை சந்திக்க அவரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செவிலியர்களின் உறவினர்கள் என அனைவரும் உடனடியாக அந்த வளாகத்தினை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வாயில்களில் போலீசார் குவிக்கப்பட்டு தயாராக இருப்பதால் செவிலியர்களும் எந்நேரமும் வெளியேற்றப் படக் கூடிய சூழலே தற்பொழுது அங்கு நிலவுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com