கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் மறுப்பு: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டி.டி.வி.தினகரன் வழக்கு

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான பிரச்னையில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி அதிமுக அம்மா அணி
கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் மறுப்பு: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டி.டி.வி.தினகரன் வழக்கு

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான பிரச்னையில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக அணிகளின் நிர்வாகிகளுக்கு இடையே தேர்தல் நடத்தி இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் சின்னத்தை ஒதுக்குவது குறித்து அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: 
இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது குறித்து அக்.31 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்.15 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு எனது தரப்பு வாதத்தையும், முன்னாள் அமைச்சர் செம்மலை தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கேட்கவில்லை. உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலைக் கருத்தில் கொண்டு, அக்.31 ஆம் தேதிக்குள் இரட்டை இலை யாருக்கு என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
இதையடுத்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் செப்.29 ஆம் தேதிக்குள் புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. எங்கள் தரப்பிலான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டோம். 102 எம்எல்ஏ-க்கள், 37 எம்.பி.-க்கள் மற்றும் 1912 பொதுக்குழு மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களின் மனுக்கள் அடங்கிய 7 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளோம். 
இந்நிலையில் மீண்டும் புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது பிரச்னையை பெரிதுப்படுத்தும் நோக்கில் உள்ளது. கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், புதிதாக நியமிக்கப்பட்டவர்களையும் ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது நீதிக்கு எதிரானது. மேலும், நவம்பர் 17 -ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டதால் சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஆனால், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கும் பணிகளுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும். அதனால் தான் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க காலதாமதம் ஆவதாக மாநில தேர்தல் ஆணையம் தனது மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதுபோல கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். ஆனால், எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 
எனவே எங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் வழங்கவும், அதன் பின்னரே சின்னம் குறித்து முடிவு செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com