நவீன சாண எரிவாயு கலன் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வருமா?

தமிழகம் முழுவதும் வீடுகளில் சமையலுக்கு இயற்கை முறையில், 100 சதவீத மானியத்தில் நவீன சாண எரிவாயு கலன் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
பொன்னை அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பண்டாரபள்ளி கிராமத்தில் 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள சாண எரிவாயு கலனை காண்பிக்கும் பெண்.
பொன்னை அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பண்டாரபள்ளி கிராமத்தில் 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள சாண எரிவாயு கலனை காண்பிக்கும் பெண்.

தமிழகம் முழுவதும் வீடுகளில் சமையலுக்கு இயற்கை முறையில், 100 சதவீத மானியத்தில் நவீன சாண எரிவாயு கலன் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. அதற்கு மேல் தேவைப்பட்டால் மானியம் கிடைக்காது.
இந்நிலையில், இயற்கை முறையில் நவீன சாண எரிவாயு குறித்து பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.ராஜா கூறியதாவது:
நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் வீழ்ந்து வரும் நிலையில், இதைத் தடுக்கும் வகையில் முழு மானியத்தில் சாண எரிவாயு (கோபர் கேஸ்) கலன் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆடு, மாடு வளர்ப்பவர்கள், அரசு வழங்கிய இலவச ஆடு, மாடு திட்டத்தில் பயனடைந்தவர்கள் என அனைவருமே கால்நடைக் கழிவுகள் மூலம் இயற்கையான சாண எரிவாயு (கோபர் கேஸ்) பெற முடியும். இந்த சாண எரிவாயு, அழுத்தம் குறைவு என்பதால் மிகவும் பாதுகாப்பானது.
தற்போது புழக்கத்தில் உள்ள எல்பிஜி சமையல் எரிவாயு பயன்பாட்டால் வெளியேறும் நச்சுப் புகை மற்றும் விபத்துகள் காரணமாக நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில், தேசிய சாண எரிவாயு திட்டத்தின் கீழ் ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு இரண்டு கன மீட்டர் அளவுள்ள சிமென்ட்டாலான சாண எரிவாயு கலன் அமைக்க ரூ. 13 ஆயிரம் செலவாகிறது. அதற்கு ரூ. 8 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆந்திர மாநில அரசு கடந்த 15 ஆண்டுகளாக கிராமங்கள் தோறும் 100 சதவீத மானியத்தில் சாண எரிவாயு கலன் வழங்கி வருகிறது.
அதே போல, தமிழகத்திலும் கிராமங்கள் தோறும் 100 சதவீத மானியத்தில் பழைய முறையான செங்கல் மற்றும் சிமென்ட்டால் ஆன சாண எரிவாயு கலனுக்கு பதிலாக எளிதாக பொருத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் ஆன நவீன சாண எரிவாயு கலன் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
அவ்வாறு அமைக்கும் பட்சத்தில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5.50 லட்சத்துக்கும் அதிகமான மாடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இதனால் ஒரு மாட்டின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 12 முதல் 18 கிலோ சாணம் கிடைக்கும். அதன்படி கணக்கிட்டால் சுமார் 66 லட்சம் கிலோ சாணம் கிடைக்கிறது. இதில், 40 கிலோ சாணத்தில் இருந்து ஒரு கிலோ சாண எரிவாயு கிடைக்கும். அதன்படி 1.65 லட்சம் கிலோ சாண எரிவாயு தயாரிக்க முடியும் என்றார்.
எனவே மத்திய, மாநில அரசுகள் கிராமங்கள் தோறும் 100 சதவீத மானியத்தில் நவீன சாண எரிவாயு கலன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com