டெங்கு: கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 500 வீடுகளாகவும், பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 300 வீடுகளாகவும் கொண்ட சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கொசு ஒழிப்பு
டெங்கு: கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 500 வீடுகளாகவும், பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 300 வீடுகளாகவும் கொண்ட சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
உள்ளாட்சிப் பகுதிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் புகை அடித்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளில் உள்ள காலிமனைகளில் சில இடங்களில் பொதுமக்களால் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தும் முயற்சிகளை கையாள வேண்டும். புகை அடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்யலாம்.
மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com