இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம்: 6 வாரங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்படும்: நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் தகவல்

இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை 4 முதல் 6 வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்று தில்லி உயர்

இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை 4 முதல் 6 வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ஆசுதோஷ் குமார் முன் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, சுகேஷ் சந்திரசேகர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுதீர் நந்தரஜோக், 'இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த ஜூலை 14-ம் தேதியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ள சுகேஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற இடைத்தரகர்கள் தேர்தல் ஆணையத்தில் யாரிடம் பேசினார்கள் என்பதை தில்லி போலீஸார் வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கில் சுகேஷுக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காக அவசர கதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்.
இதையடுத்து, நீதிபதி ஆசுதோஷ் குமார், 'தில்லி போலீஸாரின் விசாரணை எப்போது முடிவடையும்?' என்று கேள்வி எழுப்பினார். 
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதாகவும், அடுத்த 4 முதல் 6 வாரங்களில் முடிவடையும் என்று தில்லி போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆஷிஷ் தத்தாவும், தில்லி காவல் துறை இணை ஆணையர் (குற்றப்பிரிவு) ராஜேஷ் தேவ் பதிலளித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் தற்போதைய நிலை அறிக்கையை டிசம்பர் 5-ம் தேதிக்குள் தில்லி குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அடுத்த விசாரணையின்போது, சுகேஷ் சந்திரசேகரனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிறப்பு நீதிபதிக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதையும் தில்லி போலீஸார் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக, இரு அணிகளாகப் பிரிந்தது. இதையடுத்து முடக்கப்பட்ட அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயன்றதாக டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா பண விநியோகஸ்தர்களான நத்து சிங், லலித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com