உள்ளாட்சி: மத்திய நிதி ஒதுக்கீட்டில் அரசியல் குறுக்கீடு இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய நிதியாணைய நிதி ஒதுக்கீட்டில் அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
உள்ளாட்சி: மத்திய நிதி ஒதுக்கீட்டில் அரசியல் குறுக்கீடு இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய நிதியாணைய நிதி ஒதுக்கீட்டில் அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான மின் கட்டணத்தையும், குடிநீர் கட்டணத்தையும் செலுத்தாமல் மத்திய நிதியாணையம் அளித்துள்ள அடிப்படை மானியத் தொகை ஒப்பந்தங்களுக்கு முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில்தான்...: மத்திய அரசோ, மாநில அரசோ ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கும்போது, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தத் திட்டம் செயலாக்கப்படும் என்பது நடைமுறை.
தவறான குற்றச்சாட்டு: வகுக்கப்பட்ட திட்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, பல்வேறு தணிக்கைத் தடைகளுக்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படும். 
மேலும், திட்டத்தைச் செயல்படுத்தும் அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இந்த நடைமுறைகளை எல்லாம் உணராமல் அரசு மீது தவறாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நிதி விடுவிப்பு: நடப்பாண்டில் 14-ஆவது மத்திய நிதிக் குழு மானிய பரிந்துரையின் அடிப்படையில் முதல் தவணைத் தொகையாக மாநகராட்சிகளுக்கு ரூ.252.79 கோடியும் நகராட்சிகளுக்கு ரூ.195.91 கோடியும் மாநில அரசால் விடுவிக்கப்பட்டது. 
இந்த நிதியின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சியின் பங்குத் தொகையாகவும், குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் அமைக்கவும்...: மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தைச் செலுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டணத்தைச் செலுத்தவும், திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை மேற்கொள்ளவும், புதிய சாலைகளை அமைக்கவும் நெறிமுறைகளின்படி நிதி விடுவிக்கப்பட்டது.
இந்தத் தொகையில் நடப்பாண்டில் தமிழ்நாடு நகர்ப்புறச் சாலைகள் உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் தோராயமாக 18 சதவீதம் என்ற அளவில் 14-ஆவது மத்திய நிதிக் குழு மானியத் தொகையில் இருந்து எடுத்து சாலைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமீறல்கள் இல்லை: எனவே, மத்திய நிதியக் குழு மானியத் தொகை விடுவிப்பிலும், திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதிலும் முறைகேடுகளோ, விதிமீறல்களோ, அரசியல் குறுக்கீடுகளோ இல்லை. அவதூறான அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com