தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு கூகுள் மேப்: பொதுமக்கள் வரவேற்பு

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மதுரை போலீஸார் வடிவமைத்துள்ள சிறப்பு கூகுள் மேப் வசதி வெளியூர்களில் இருந்து மதுரை வரும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு கூகுள் மேப்: பொதுமக்கள் வரவேற்பு

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மதுரை போலீஸார் வடிவமைத்துள்ள சிறப்பு கூகுள் மேப் வசதி வெளியூர்களில் இருந்து மதுரை வரும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதன்கிழமை  தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாநகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் மாசி வீதிகள், விளக்குத்தூண், காமராஜர் சாலை சந்திப்பு, நேதாஜி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

ஆடைகள் மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக மதுரை அல்லாமல் அதைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக மதுரைக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது.

இதனால் பெரியார் பேருந்து நிலையம்,  ரயில் நிலையம்,  சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்தது.  இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மாலை வேளைகளில் ரயில் நிலையம் முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியே பெரும்பாலான கடை வீதிகள் உள்ளதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் மதுரை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் வெளியூர்வாசிகளும் பயனடையும் வகையில் "கூகுள் மேப்' வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதில் வாகனங்கள் நெருக்கடியின்றி செல்லும் பாதை, மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் பகுதிகள்,  இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துமிடம்,  வாகனங்களை நிறுத்தக் கூடாத பகுதிகள் உள்ளிட்டவை தெளிவாக கூறப்பட்டுள்ளன.

இதேபோல மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து திருச்சி,  திண்டுக்கல்,  திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளின் வழித்தடங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மதுரையைச் சுற்றியுள்ள புறநகர் மற்றும் கிராமப்புற மக்கள் மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வருவோரும் கூகுள் மேப் வசதி மூலம் மதுரை கடை வீதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி டவுன் ஹால் சாலை மசூதி பகுதி, நேதாஜி சாலை, மேற்கு வடம்போக்கி சாலை, தெற்கு மாரட் வீதி, சின்னகடை வீதி, கிழக்கு மாசி வீதி, பழைய சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட ஏழு இடங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேதுபதி மேல்நிலைப்பள்ளி,  சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுரைக் கல்லூரி, புனித மரியன்னை பள்ளி உள்ளிட்ட இடங்களில் தீபாவளி பொருள்கள் வாங்க வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com