தீபாவளி உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து கருப்புக் கொடியேற்றி போராட்டம்

நாகையில் தீபாவளி உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கருப்புக்கொடியேற்றி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகையில் தீபாவளி உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கருப்புக்கொடியேற்றி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வறட்சியால் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏப்.17, 18, 19, 20 ஆகிய 4 நாள்கள் காத்திருப்பு போராட்டம், கவன ஈர்ப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், விவசாயத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. 
பின்னர் அக்.6 ஆம் தேதி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ. 5000 வழங்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. 
தீபாவளிக்கு முன்பு உதவித்தொகை வழங்கப்படாவிட்டால் அக்.17 ஆம் தேதி வீடுகள், தெரு முனைகள் உள்ளிட்ட இடங்களில் கருப்பு கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கொண்டாடப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் சார்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை அருகே செல்லூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராமலிங்கம், நகரச் செயலர் கோபிநாதன், ஒன்றியச் செயலர் பாண்டியன், மாதர் சங்க ஒன்றியச் செயலர் சசிரேகா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல் கீழையூர் ஒன்றியத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூண்டி அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் டி. செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ஏ. செல்லையன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணைத் தலைவர் எஸ். காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல் வேதாரண்யம், சீர்காழி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com