சாத்தனூர் அணை திறக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி அடுத்த பாகூரில் தென்பெண்ணையாற்றில்  இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டோடும் வெள்ள நீர்.
சாத்தனூர் அணை திறக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி அடுத்த பாகூரில் தென்பெண்ணையாற்றில் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டோடும் வெள்ள நீர்.

பாகூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது

புதுச்சேரி மாநிலம் பாகூர் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகள், வயல் வெளிகளில் நீர் புகுந்து பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாயினர். 

புதுச்சேரி மாநிலம் பாகூர் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகள், வயல் வெளிகளில் நீர் புகுந்து பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாயினர். 
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையும் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், சாத்தனூர் அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாகூர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ள நீரை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் கரையோரப் பகுதிகளுக்கு வருகின்றனர்.
மேலும், வெள்ளம் காரணமாக கடலூரை இணைக்கும் கொமந்தான் மேடு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர்.
இதனால் வெளிச்செம்மண்டலத்தில் இருந்து புதுச்சேரி மாநில பகுதிகளான ஆராய்ச்சிக்குப்பம், கொமந்தான்மேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், மருதாடு தடுப்பணையும் நிரம்பி வழிகிறது.
கரைப்பகுதிகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருவதால் அவற்றை சீரமைக்கும் பணிகளில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கரையோர கிராமங்களில் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்கள் கரைப்பகுதிக்கு செல்ல வேண்டாம். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் எனவும் எச்சரித்து வருகின்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளத்தடுப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கடலூர் அருகே சொர்ணாவூர் படுகை அணையில் இருந்து வெள்ளநீர் புதுச்சேரி பகுதிக்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. கரையாம்புத்தூர் கால்வாய் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
கரையாம்புத்தூர் பாகூர் பிரதான சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும், 20 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். 
இளைஞர்கள் சிலர் கரையோரத்தில் மீன்களை உற்சாகத்துடன் பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
தென்பெண்ணையாற்றில் நீண்ட காலத்துக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com