பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆதரவுக்காக  பகிரங்க மன்னிப்பு: வருத்தம் தெரிவித்த கமல்! 

கடந்த ஆண்டு பிரதமர் மோடி மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்ளக் கடமைப்பபட்டிருப்பதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆதரவுக்காக  பகிரங்க மன்னிப்பு: வருத்தம் தெரிவித்த கமல்! 

சென்னை: கடந்த ஆண்டு பிரதமர் மோடி மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்ளக் கடமைப்பபட்டிருப்பதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி இரவு அன்று பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதாதாக அறிவிக்கும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்கு நாடு முழுவதும்  பலத்த எதிர்ப்பு எழுந்தது.

அப்பொழுது கருப்பு பணத்தினை ஒழிக்க இத்திட்டம் உதவும் என்று எண்ணியதால் இந்த நடவடிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அந்த விஷயத்தில் தான் அவசரப்பட்டுவிட்டதாகவும், அதற்காக இப்போது பகிரங்க மன்னிப்புக் கேட்பதாகவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

பிரபல வாரப்பத்திரிக்கை ஒன்றில் நடிகர் கமல் தற்பொழுது கட்டுரைத் தொடர் ஒன்றினை எழுதி வருகிறார். இந்த தொடரின் மூன்றாவது வாரத்தில், இது தொடர்பாக கமல் குறிப்பிட்டுள்ளதாவது:

பணமதிப்பு நீக்கம் (demonetisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில், முழு ஆதரவையும் அத்திட்டத்துக்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன்.

ஆனால், என் சகாக்கள் பலரும்,  பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

கொஞ்சநாள் கழித்து, டீமானிடைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு, பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக்கொண்டேன்.

தற்போது, `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்துக்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு கமல் தன்னுடைய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com