டெங்கு: தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி ஆய்வு

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தியைத் தடுக்கவும் கொசு உற்பத்திக்குக் காரணமாக இருப்போர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைளை எடுக்கும் பணியில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள்  ஈடுபட்டனர்.
டெங்கு: தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி ஆய்வு

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தியைத் தடுக்கவும் கொசு உற்பத்திக்குக் காரணமாக இருப்போர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைளை எடுக்கும் பணியில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் வியாழக்கிழமை (அக்.19) ஈடுபட்டனர்.
13,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் முதல் சிறிது சிறிதாக அதிகரித்து வந்தது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் 13,000-த்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம், அதைக் கட்டுப்படுத்த அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தில்லியிலிருந்து மத்திய மருத்துவக் குழுவினர் அண்மையில் ஆய்வு செய்து விட்டுச் சென்றனர். 
முதல்வர் அறிவுறுத்தலின் அடிப்படையில்...தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு காய்ச்சலைப் பரப்பும் "ஏடீஸ் எஜிப்டை' கொசு வளரும் இடங்களைக் கண்டறிந்து அதை அழிப்பதற்கான வழிமுறைகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
வியாழக்கிழமைதோறும்...டெங்கு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் "டெங்கு தடுப்பு தினம்' கடைப்பிடிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
அபராதம் விதிப்பு: தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு பகுதிகளின் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு செய்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார். 
ராணிப்பேட்டையில் டெங்கு உள்ளிட்ட கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் மாடியில் மாடியில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றாத கட்டட உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் விதித்தார்.
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்: டெங்கு காய்ச்சல் உள்பட அனைத்து வகையான காய்ச்சலுக்கும் காரணமாக இருக்கும் கொசு உற்பத்தியாவதைத் தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்புக் கோரி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் விநியோகித்தனர். களப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆலோசனைக் கூட்டங்களையும் தொடர்ந்து அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.


டெங்கு ஒழிப்பில் 90,000 பணியாளர்கள்

சவாலாக விளங்கும் 6 மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், சேலம், நாமக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்கள் மட்டுமே சவாலாக உள்ளன.
4 துறைகள்: சுகாதாரத் துறையால் மட்டுமே செய்யப்பட்டு வந்த பணிகளை தற்போது மொத்தம் 4 துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதனால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் இம்மாத இறுதிக்குள் டெங்கு முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
90,000 பணியாளர்கள்: டெங்கு தடுப்புப் பணிகளில் கிராமப்புற செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் என சுகாதாரத் துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர், வருவாய் நிர்வாகத் துறையைச் சேர்ந்த தாசில்தார், கிராமப்புற நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர், சமூக நலத்துறையைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் 40 ஆயிரம் பேர் என மொத்தம் 90 ஆயிரம் நேரடி களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் வீடுகளில் கொசு உற்பத்தியாகும் ஆதாரங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனவே, தற்போது பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வங்கி, காலி மனைகள், சினிமா அரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டெங்குவை உற்பத்தி செய்யும் ஏடிஸ் எஜிப்டை கொசுக்கள் பெருகுவதற்கான ஆதாரத்தை அழிக்கும் பணிகளில் அரசுத் துறைகள் ஈடுபட்டுள்ளன.
குறையும் எண்ணிக்கை: இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியது:
பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் 
குறையத் தொடங்கியுள்ளன. ஒரு நாளைக்கு பல்வேறு வகை காய்ச்சல்களால் சுமார் 1,300 பேர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அந்த எண்ணிக்கையில் இருந்து 200, 300 பேர் குறைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com