முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி

பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்குப் பிறகு சென்னை கோடம்பாகத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (அக்.19) மாலை வந்தார்.
சென்னை முரசொலி அலுவலகத்தில் முரசொலி பவள விழா கண்காட்சியை வியாழக்கிழமை பார்வையிட்ட திமுக தலைவர் கருணாநிதி. உடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு
சென்னை முரசொலி அலுவலகத்தில் முரசொலி பவள விழா கண்காட்சியை வியாழக்கிழமை பார்வையிட்ட திமுக தலைவர் கருணாநிதி. உடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு

பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்குப் பிறகு சென்னை கோடம்பாகத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (அக்.19) மாலை வந்தார். முரசொலி பவள விழா கண்காட்சியை சுமார் அரை மணி நேரம் சுற்றிப் பார்த்தார்.
திமுகவின் மும்பெரும் விழா கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய கருணாநிதி, உடல்நலமின்மையால் அதற்குப் பிறகு நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் காரில் புறப்பட்ட கருணாநிதி, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு 6.55 மணியளவில் மகள் செல்வியுடன் வந்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் உடன் வந்தனர்.
கண்காட்சியைப் பார்வையிட்ட கருணாநிதி: முரசொலி பவளவிழாயொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கருணாநிதி பார்வையிட்டார். கண்காட்சியில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சிறிது நேரம் கருணாநிதி அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலை அருகில் சென்று பார்வையிட்டார். 
பின்னர் 7.35 மணியளவில் காரில் ஏறி கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். கோபாலபுரம் இல்லம் வாயிலில் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் கருணாநிதி கைகளை உயர்த்தி அசைத்துக் காட்டினார்.
நல்ல முன்னேற்றம்: உடல் நலம் தொடர்பாக அவரது மருத்துவர் டாக்டர் கோபால், ""கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டொரு நாளில் ஓர் அதிசயத்தைக் காண்பீர்கள்'' என்றார்.
ஓராண்டுக்குப் பிறகு... திமுகவின் மும்பெரும் விழாவுக்குப் பிறகு ஒவ்வாமை காரணமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் கருணாநிதி கோபாலபுரம் வீட்டிலேயே இருந்து வந்தார். 2016 டிச. 1-ஆம் தேதி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு, சளித் தொல்லை காரணமாக அனுமதிக்கப்பட்டு, டிச. 7-ஆம் தேதி வீடு திரும்பினார். 
அதன் பின், தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக டிச. 15-ஆம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். டிச. 16-ஆம் தேதி அவருக்கு சுவாசத்தைச் சீராக்குவதற்காக டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு, டிச. 23-ஆம் தேதி வீடு திரும்பினார்.
பின்னர், வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் அவ்வப்போது வந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
தலைவர்கள் சந்திப்பு: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்பட தேசிய மற்றும் தமிழகத் தலைவர்கள் கருணாநிதியை அவரது இல்லத்துக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். இதற்கிடையில் கருணாநிதியின் சட்டப்பேரவை விழா ஜூன் 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. ராகுல் காந்தி உள்பட பல்வேறு தேசியத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் கருணாநிதி பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்திலிருந்து முரசொலி அலுவலகத்துக்கு வந்து சென்றுள்ளார். விரைவில் அவருக்கு பொருத்தப்பட்டுள்ள டிரக்யாஸ்டமி கருவியும் அகற்றப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com