டெங்கு பாதிப்பை ஒரு நிமிடத்துக்குள் அறிந்து கொள்ள வசதி: அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சலையும் ஒரு நிமிடத்துக்குள்ளாகப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ள அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியைப்  பார்வையிட்டு ஆறுதல் கூறிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன்,  அமைச்சர் பா.பெஞ்சமின், ஆட்சியர் பா.பொன்னையா, எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பார்வையிட்டு ஆறுதல் கூறிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன், அமைச்சர் பா.பெஞ்சமின், ஆட்சியர் பா.பொன்னையா, எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர்.

டெங்கு உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சலையும் ஒரு நிமிடத்துக்குள்ளாகப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ள அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. 
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருந்தன. தற்போது அது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வருவாய்த்துறை ஆணையர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொசுப் புழுவை உற்பத்தி செய்பவர்கள் தாமாக முன்வந்து புழுக்களை அகற்றவில்லை எனில், அவர்கள் மீது வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. 
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதன்மூலம், நூறு சதவீதம் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். 
புதிதாக அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு நோயாளிகளின் படுக்கைக்கு அருகிலேயே, கூடுதலாக "செல் கவுன்ட்டர்கள்' வழங்கப்படவுள்ளன. 
இதற்காக, முதல்கட்டமாக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 20 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு பரிசோதனைக்கு தேவைப்படும் கருவிகள், செவிலியர்கள், பரிசோதனை ஆய்வாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மஸ்தூர் எனும் களப் பணியாளர்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கை மூலம் டெங்கு பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. 
29 வகையான காய்ச்சலுக்கும் தீர்வு: டெங்கு, மலேரியா, ஃப்ளூ, டைபாய்டு உள்பட 29 வகையான காய்ச்சலுக்கும் ஒரு நிமிடத்துக்குள் பரிசோதனை செய்து, அறிந்து கொள்ள அரசு மருத்துவமனைகளில் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 24 மணி நேரத்துக்குள் ஆய்வு முடிவை கண்டறிந்து, விரைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, குணப்படுத்த முடியும். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது 105 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. இது கடந்த வாரத்தை விட குறைவான எண்ணிக்கையாகும் என்றார் அவர். 

"நிலவேம்பு குடிநீரால் பாதிப்பில்லை'

பலமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுதான் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. 
இதற்காக, 2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டுள்ளார். நிலவேம்புக் குடிநீர் குறித்து 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. 
மேலும், ஐசிஎம்ஆர் எனும் மத்திய அரசு ஆய்வு நிறுவனம், கிண்டி கிங் ஆய்வு நிறுவனம், சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றின் முடிவில் நிலவேம்புக் குடிநீரை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில், நிலவேம்புக்குடிநீர் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. நிலவேம்புக் குடிநீர் தொடர்பான தேவையற்ற வதந்திகளுக்கு பொதுமக்கள் இடம் தர வேண்டாம் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com