பல மரணங்களைப் பார்த்தும் மரணிக்காத கருணை: வெட்டியான் வேலை செய்யும் பெண்!

கோவை மாவட்டம் சொக்கம்புதூர் இடுகாட்டுக்கு வரும் பிணங்களை தன்னந்தனியாக நின்று இறுதிச் சடங்கு செய்யும் பெண்ணைப் பார்த்து நிச்சயம், அங்கு வந்தவர்கள் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள்.
பல மரணங்களைப் பார்த்தும் மரணிக்காத கருணை: வெட்டியான் வேலை செய்யும் பெண்!


கோவை மாவட்டம் சொக்கம்புதூர் இடுகாட்டுக்கு வரும் பிணங்களை தன்னந்தனியாக நின்று இறுதிச் சடங்கு செய்யும் பெண்ணைப் பார்த்து நிச்சயம், அங்கு வந்தவர்கள் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள்.

ஆண்களே செய்யத் தயங்கும் வெட்டியான் வேலையை எந்த முக சுளிப்பும், முணகலும் இல்லாமல் எளிமையாக செய்யும் வைரமணிக்கு தற்போது 34 வயது. 3 குழந்தைகளுக்குத் தாயான வைரமணியின் தந்தை இதே இடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வந்துள்ளார்.

தனது 10வது வயது முதல், இதே இடுகாட்டில், தனது தந்தையுடன் இருந்து பல பிணங்களை எரிப்பதையும், புதைப்பதையும் பார்த்து வந்தவருக்கு, அவரது தந்தையின் இறப்புக்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற இந்த வேலையைச் செய்யும் நிலை ஏற்பட்டது.

ஒரு பக்கம் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான தனது கணவருக்கு நிலையான வருமானம் இல்லாததால், தனது ஏழ்மையான குடும்பத்தைக் காக்கவும், தனது தந்தை விட்டுச் சென்ற வேலையை செய்யவும் அவர் வெட்டியான் வேலையை கையில் எடுத்தார்.

யார் துணையும் இன்றி பிணங்களை எரிப்பதும், குழிதோண்டி புதைப்பதும் என தனியாளாகவே செய்கிறார். பகலில் மட்டுமல்ல, நள்ளிரவில் வரும் பிணங்களைக் கூட அவர் தன்னந்தனியாக நின்று எரித்துவிடுகிறார்.

இது பற்றி அவர் கூறுவது என்னவென்றால், என்னை உலகம் எப்படி பார்க்கிறது என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. சிலர் தன்னை ஒரு ஆச்சரியமாகவேப் பார்ப்பதும் உண்டு என்கிறார். இதை வெறும் பணத்துக்காக செய்யும் வேலையாக மட்டும் இல்லாமல், யாருமற்ற அனாதைப் பிணங்களை தானே முன் வந்து இறுதிச் சடங்கு செய்யும் வைரமணி பலருக்கும் முன் உதாரணமாக விளங்குகிறார். மரணங்களையே பார்த்து வந்தாலும், அவரது கருணை உள்ளம் இன்னும் மரணிக்கவில்லை. 

உடல்களைப் புதைக்கவும், எரிக்கவும் ரூ.500 கட்டணமாகப் பெறுகிறார் வைரமணி. இதற்காக அவர் சுமார் 6 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மின் தகன மேடைகளின் அதிகரிப்பால், இடுகாட்டுக்கு வரும் உடல்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 

நாள் பூராவும் இடுகாட்டிலேயே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் பல மரணங்களை பார்க்க நேர்ந்தாலும், அவர் மனதையும் கலங்கச் செய்யும் விஷயம் இருக்கிறதாம். ஆம், எந்த உடலைப் பார்த்தாலும் எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், குழந்தைகளின் உடல்கள் இறுதிச் சடங்குக்கு வரும் போதுதான் அது என்னை வெகுவாகப் பாதிக்கும் என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com