மெர்சல் பட விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக சுயவிளம்பரம் தேட முயற்சி: புதுவை அதிமுக குற்றச்சாட்டு

மெர்சல் பட விவகாரத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் சுயவிளம்பரம் தேடி வருகின்றன என புதுவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். 
மெர்சல் பட விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக சுயவிளம்பரம் தேட முயற்சி: புதுவை அதிமுக குற்றச்சாட்டு

மெர்சல் பட விவகாரத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் சுயவிளம்பரம் தேடி வருகின்றன என புதுவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். 

புதுச்சேரியில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் வருமானம் ஒன்றையே குறிக்கோளாக ஏற்று திரையிடப்படும் திரைப்படத்தை பற்றி தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும், தங்களது சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தொடர்ந்து தேவையற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளன. 

அவற்றை மக்கள் மீது திணித்து வருவதை புதுச்சேரி மாநில அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. மெர்சல் திரைப்படத்தில் மருத்துவம் தொடர்பாக தெரிவித்த ஜிஎஸ்டி சம்பந்தமான ஒரு தவறான கருத்து கூறப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கதிர்காமம் மருத்துவமனையில் டயாலிசஸ் மருத்துவ பிரிவில் நடந்த 4 பேர் மரணம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இதை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொள்வாரா?

புதுச்சேரியில் பொது மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிப்பதை நாராயணசாமி உறுதிப்படுத்துவாரா? அனைத்து தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியுமா?.

நடைமுறையில் உள்ள பேனர் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாராயணசாமி கூறிவருகிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை.

புதுவையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று முதல்வர் கூறியுள்ள நிலையில் 3 பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் இருந்து கைதிகள் வெளியில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

தொற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு போனஸ் போடவில்லை. இலவச அரிசி, புடவைகள்,கைலிகள் வழங்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளவம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கவலைப்படாமல் மெர்சல் திரைப்படத்தை பற்றி பேசுவது மாநில முதல்வரின் வேலையா?

பொதுப்பணித்துறையில் 112 கோடி ரூபாய், இலவச அரிசி கொள்முதல் செய்ததில் 20 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இலவச சர்க்கரை கொள்முதல் செய்ததில் ஒன்னே முக்கால் கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அரசின் கடனை முதலில் கொடுங்கள் பிறகு இலவச பொருட்கள் வழங்கலாம் என ஆளுநர் கூறியுள்ளார்.

பாப்ஸ்கோவில் மட்டும் 32 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேட்டிற்கு சிபிஐ விசாரணை வைக்காமல் நாராயணசாமி துணை போகிறார்.

சிபிஐ ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கிரண்பேடி மிரட்டி வருகிறார். ஆனால் அதிமுக சார்பில் ஆதாரபூர்வமாக புகார் கூறியும் இதுவரை ஏன் கவர்னர் பாப்ஸ்கோ முறைகேட்டில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் புதுச்சேரி அரசின் வருவாயை பெருக்க அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com