நாம நீர்வீழ்ச்சி சுற்றுலாத் தலமாக்கப்படுமா? கல்லாத்தூர் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

செங்கத்தை அடுத்த கல்லாத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள நாம நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாம நீர்வீழ்ச்சி சுற்றுலாத் தலமாக்கப்படுமா? கல்லாத்தூர் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

செங்கத்தை அடுத்த கல்லாத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள நாம நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கம் வட்டம், கல்லாத்தூர் ஊராட்சியில் ஜவ்வாதுமலைப் பகுதியில் அமைந்துள்ளது நாம நீர்வீழ்ச்சி. மழைக்காலங்களில் ஜவ்வாதுமலையில் உள்ள பல்வேறு மூலிகைச் செடிகள், மரங்களின் வழியாக வரும் தண்ணீர் நாம நீர்வீழ்ச்சியில் விழுவதாகவும், இந்தத் தண்ணீரில் குளிப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் குணமடைவதாகவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், தண்ணீர் வரும்போது இந்த நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிப்பதால், இங்கு குளிக்கவும், நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கவும் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நீர்வீழ்ச்சிக்கு வருகின்றனர். மேலும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாள்களில் நீர்வீழ்ச்சியில் அதிகளவில் கூட்டம் காணப்படும்.

எனினும், இந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு சென்று வர போதுமான சாலை வசதி இல்லாததுடன், நீர்வீழ்ச்சிப் பகுதியில் பெண்களுக்கான உடை மாற்றும் அறைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே, கல்லாத்தூர் ஊராட்சியில் இருந்து நீர்வீழ்ச்சி வரை தரமான சாலைகள் அமைக்க வேண்டும். நீர்வீழ்ச்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும், நாம நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதன் மூலம் கல்லாத்தூர் பகுதி வளர்ச்சியடையும் என்பதால், இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com