உயிரைக் கொல்லும் நீலத் திமிங்கலம்: கடிவாளம் போடுமா டிராய்?

உயிரைப் பறிக்கும் நீலத் திமிங்கலம் (புளூவேல்) ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமானால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய இறுதி அமைப்பாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமே
உயிரைக் கொல்லும் நீலத் திமிங்கலம்: கடிவாளம் போடுமா டிராய்?

உயிரைப் பறிக்கும் நீலத் திமிங்கலம் (புளூவேல்) ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமானால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய இறுதி அமைப்பாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமே (டிராய்) உள்ளது. எனவே, அந்த இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ரஷியாவில் புளூவேல் விளையாட்டை ஆன்லைன் மூலமாக அந்நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் விளையாடி வருகின்றனர். புளூவேல் என்பது பொதுவாக விளையாட்டு அல்ல. அது ஆன்லைனில் முகம் தெரியாத ஒருவர் மூலமாக இடப்படும் கட்டளையாகும். இதற்காக அந்தக் குழுவினர் நமது இ-மெயில், முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை, தொடர்பு எண், குறுஞ்செய்தி, ஆகியவை மூலமாக நமது ரகசியத் தகவல்கள் அனைத்தையும் திருடி விடுகின்றனர்.
அதன்பின் நம்மை அடிமைபோல் பயன்படுத்தி, மொட்டை மாடி சுவரில் ஏறி நின்று சூரியனுடன் சுயபடம் (செல்பி) எடுத்து அனுப்பவேண்டும். கைகளை பிளேடால் கிழித்து அதைப் புகைப்படமாக எடுத்து அனுப்பவேண்டும், என்பது போன்ற விபரீதக் கட்டளைகள் நமக்கு இடப்படும். ஆனால் அந்த விளையாட்டில் இருந்து வெளியேற நினைக்கும்போது புளூவேல் அட்மின்களால் நமது அனைத்துத் தகவல்களும் நம்மைச் சார்ந்தவர்களுக்குப் பகிரப்படும் என்று மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் நாம் அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்கள் சொல்லும் அனைத்தையும் செய்ய முயற்சிக்கும்போது உயிரிழப்புகள் தடுக்க இயலாததாகின்றன.
மாணவர்களைக் குறி வைக்கும் புளூவேல்: இந்த விளையாட்டை பொதுவாக அனைவராலும் விளையாட இயலாது. இதற்கு நல்ல கணினி அறிவும், தொழில்நுட்பம் அறிந்தவராகவும் இருக்கவேண்டும். இதற்காக பிரத்யேகமாக உள்ள இணையதளத்தில் இருக்கும் டெத் குரூப் என்ற குழுவில் இணைய வேண்டும். அவ்வாறு இணைபவர்கள் பின்னாளில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுகின்றனர்.
இந்த விளையாட்டை இந்தியா முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்கிற விக்கி (19) இதற்கு முதல் பலியாகி உள்ளார்.
உயிரிழந்த மாணவரின் கையில் நீலத் திமிங்கலத்தின் படம் இருந்துள்ளது. இதன்பிறகே இந்த விவகாரம் மாநிலம் முழுவதிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. இதையடுத்து, காவல் துறையினர், மன நல மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் இந்த விளையாட்டு தொடர்பான ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இளைஞர்களின் நலன் கருதி மத்திய தகவல், செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2015-ஆம் ஆண்டு 857 ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது அதைப் போலவே, இதுபோன்ற விபரீத விளையாட்டுகளை நடத்தும் இணையதளங்களையும் தடை செய்ய டிராய் அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெட்வொர்க் ஆபரேட்டர்களின் பங்கு: இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த கணினி பொறியாளர் ஈ. சிவகுமார் கூறும்போது, "பொதுவாக புளூவேல் போன்ற விளையாட்டுகளை தங்களுக்கு விடப்படும் சவால்களாக நினைத்து இளைஞர்கள் விளையாடுகின்றனர். குழுவில் இணைந்து அதில் இருந்து அனுப்பப்படும் லிங்க் மூலமாகவே அவர்கள் அதில் இணைகின்றனர்.
இதில் இடப்படும் கட்டளைகளை குழுவில் உள்ள அனைவரும் நிறைவேற்றும்போது அதன் மூலமாக நமக்கு அவமானம் ஏற்படும் என்று நினைத்தே அவர்கள் ஓர் உந்துதலில் தொடர்ந்து விளையாடுகின்றனர். இதுபோன்ற இணையதளங்களை தடை செய்தாலும் (டதஞலவ, யடச )போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாடுகின்றனர். எனவே, அனைத்து நெட்வொர்க் ஆபரேட்டர்களும் மனது வைத்தால் மட்டுமே இந்த விளையாட்டைத் தடை செய்ய முடியும்' என்றார்.
தனிமை விரும்பிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்: பொதுவாக இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் குழந்தைப் பருவத்துக்கும், வாலிபப் பருவத்துக்கும் இடைப்பட்ட 12 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவிகளே அதிகமாக ஈடுபடுகின்றனர் என்கிறார் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த மன நல மருத்துவர்
என்.எஸ்.மோனி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வளரிளம் பருவத்தில்தான் அவர்களுக்குப் பருவ மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தங்களுக்கு சமூகத்தில் ஒருவித அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். மேலும், அந்த வேளைகளில் அவர்கள் செய்வது மட்டுமே சரி என்றும் தோன்றும். இதற்கு அவர்களின் குடும்பச் சூழலும் முக்கியக் காரணமாக அமைக்கிறது.
தடம் மாறுகிறவர்களும், தனிமையை விரும்புகிறவர்களுமே புளூவேல் போன்ற விளையாட்டுகள் மூலமாகத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆகவே, பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தையின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டியதும், அவர்களுடன் கனிவுடன் பேசி, பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதும் அவசியம். மேலும், தவறான பாதைக்குச் செல்பவர்களுக்கு தகுந்த மன நல ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாகவும் அவர்களை விரைவாக குணப்படுத்த முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com