தமிழகத்தின் வட உள் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: அப்போ சென்னை, பெங்களூர்?

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் செப்டம்பர் மாத மழை சூடுபிடிக்கப்போகிறது. சென்னையில் இன்று அல்லது நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் வட உள் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: அப்போ சென்னை, பெங்களூர்?


சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் செப்டம்பர் மாத மழை சூடுபிடிக்கப்போகிறது. சென்னையில் இன்று அல்லது நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பெங்களூருவில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் ஒரு நாள் கன மழை பெய்யும் என்றும் சென்னையில் இன்று அல்லது நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கன மழை பெய்துள்ளது.  இது 240 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் ஆறு கரைபுரண்டு ஓடுகிறது.

கோவையை எடுத்துக் கொண்டால், பீளமேடு பகுதியில் கடந்த 5 நாட்களில் 254 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 1972ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் பெய்த மழையின் அளவே வெறும் 218 மி.மீ.தான்.

வரும் நாட்களில் மழை மேகங்கள் தீவிரமாகும். சென்னைக்கும் மழை வாய்ப்பு உண்டு.

ஒரு பக்கம் வெப்பம் தாக்கினாலும், வானில் மேகக் கூட்டங்கள் காணப்படுகின்றன. நிலப்பரப்பில் இருந்து கிளம்பும் மேகக்கூட்டங்கள் நமக்கு சாதகமாகவே உள்ளன. இல்லையென்றால், வழியில் அவை சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. உள் மாவட்டங்களில் தடையில்லாமல் மேகக் கூட்டங்கள் நகர்வதே மழைக்கான சிறந்த வாய்ப்பு. கடந்த இரண்டு நாட்களாக மழை வாய்ப்பை சென்னை இழந்துவிட்டது. ஆனால் நிச்சயம் இன்று அல்லது நாளை முதல், மழை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இன்று தான் முதல் முறையாக நிலப்பரப்பில் இருந்து மேகக் கூட்டங்கள் எந்த தடையும் இல்லாமல் நகர்ந்து கடற்கரைப் பகுதியை அடைந்ததால், பொன்னேரி மழை வாய்ப்பைப் பெறக் காரணமாக இருந்தது. இது ஒரு நல்ல அறிகுறி.

பெங்களூர் நகரத்துக்கு அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு மிகக் கன மழை வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த 4 நாட்களில் எந்த நாளில் கன மழை பெய்யும் என்பதை சொல்ல முடியவில்லை. எனவே, வரும் நாட்களில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள்.

மற்ற மாவட்டங்களுக்கும், வட உள் மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு
வட உள் மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், டெல்டா, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லையின் ஒரு சில பகுதிகள், தூத்துக்குடி, விருதுநகர், தேனி மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு உண்டு என்று பதிவு செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com