ஆளுநர் அழைத்துப் பேசாவிட்டால் உரிய நடவடிக்கை: தங்க தமிழ்ச்செல்வன்

தமிழக ஆளுநர் எங்களை அழைத்துப் பேசாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் எங்களை அழைத்துப் பேசாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
புதுச்சேரி அருகே சின்னவீராம்பட்டினம் தனியார் சொகுசு விடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு நான்கு அல்லது ஐந்து எம்எல்ஏக்கள் அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கின்றனர். மேலும், முதல்வர் மாற்றம் குறித்து ஆளுநர் அழைத்துப் பேசாவிட்டால் இரண்டு நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் நடைபெறும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கண் துடைப்புக்காக நடத்தப்படுகிற கூட்டம். எங்கள் அணியைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள். சட்டப்பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு பதில் அளிக்க சென்னை தலைமைச் செயலகம் செல்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள பிளவைச் சரிசெய்ய முடியாது . நாங்கள்தான் கட்சியைக் காப்பாற்றுவோம் என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.
அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறியதாவது: நீலதிமிங்கலம் விளையாட்டில் மாணவர்களும், இளைஞர்களும் சிக்கித் தவிப்பதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓர்ஆதிக்க சக்தியின் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 
கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் அனுமதியுடன்தான் இதுபோன்ற கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும். 
எடப்பாடி பழனிசாமி அணியினர் ஓர் ஆதிக்க சக்தியின் பிடியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். மீண்டும் நாங்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பது எங்களது நோக்கமும், விருப்பமும் என்றார்.
பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஏழுமலை கூறியதாவது: தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிற ஆட்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயர் உள்ளது என்று தெரிந்தும், மாணவி அனிதாவின் உடலுக்கு துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார். 
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்யத் தவறியதை துணைப் பொதுச் செயலாளர் செய்துள்ளார். இதிலிருந்து தினகரனை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளது தெரிகிறது என்றார் ஏழுமலை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com