இந்த ஆண்டில் 3,336 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் தகவல்

நிகழ் கல்வியாண்டில் ஆண்டில் 3,336 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் முதல்வர்

நிகழ் கல்வியாண்டில் ஆண்டில் 3,336 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு 383 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்த விருது ரூ.10,000, வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும். 
விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: நிகழ் கல்வியாண்டில் மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடியே 31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
கடந்த ஆறு ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக 40,433 ஆசிரியர்களும், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் மூலமாக 15,169 பகுதி நேர ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
நிகழ் கல்வியாண்டில் 3,336 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். 
5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி: தமிழகத்தில் இதுவரை 227 புதிய தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 116 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 
கடந்த 5 ஆண்டுகளில் பிளஸ் 2 பயின்ற 26 லட்சத்து 96 மாணவர்களுக்கு ரூ.4,723 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் 5 லட்சத்து 40,000 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையில் மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரப்பட்டியல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இது மாணவர்களிடையே உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் மாற்றப்படவுள்ள கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்றார். 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்தியாவிலேயே மாணவர்களை ஊக்கப்படுத்துவதிலும், ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதிலும் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது. அரசின் மொத்த வருமானத்தில் 4-இல் 1 பங்கு கல்வித் துறையின் மேம்பாட்டுக்குச் செலவிடப்படுவதால் தமிழக அரசு கல்வியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. கல்வி தொடர்பான மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையும், கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளும் இந்த ஆசிரியர் தினத்தில் நினைவு கூறுகிறோம். ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என மாணவர்களுக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்து அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் என்றும் போற்றத் தகுந்தவர்கள் என்றார். 
விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், செயலர் த.உதயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள், பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வரவேற்றார். தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com