பதற வைக்கும் ப்ளூ வேல் தருணங்கள்: மீட்கப்பட்ட காரைக்கால் இளைஞரின் பயங்கர அனுபவங்கள்!  

ப்ளூ வேல் விளையாட்டின் ஆபத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ள காரைக்கால் பகுதி இளைஞர் ஒருவர், அந்த விளையாட்டில் தனது பயங்கர அனுபவங்களை தற்பொழுது தெரிவித்துள்ளார்.   
பதற வைக்கும் ப்ளூ வேல் தருணங்கள்: மீட்கப்பட்ட காரைக்கால் இளைஞரின் பயங்கர அனுபவங்கள்!  

காரைக்கால்: ப்ளூ வேல் விளையாட்டின் ஆபத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ள காரைக்கால் பகுதி இளைஞர் ஒருவர், அந்த விளையாட்டில் தனது பயங்கர அனுபவங்களை தற்பொழுது தெரிவித்துள்ளார்.   

காரைக்கால் அருகே உள்ள நிரவி என்னும் கிராமத்தினைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்பொழுது தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் சேந்து உருவாக்கியுள்ள வாட்ஸ் அப் குழு ஓன்றின் மூலம் ப்ளூ வேல் விளையாட்டிற்கான லிங்கினை பெற்றுள்ளார். அது முதல் அவர் விளையாடத் துவங்கியுள்ளார். அதற்குப் பிறகு அவர் வேலைக்கு செல்வதற்காக சென்னைக்கு திரும்பச் செல்லவில்லை. வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் நேரத்தினை செலவழித்துள்ளார்.

இதனால் அவரது நடவடிக்கைகளில் உண்டான மாற்றங்களைக் கண்டு எச்சரிக்கையான அவரது சகோதரர் அஜித் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் நேற்று அதிகாலை அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கத்தியால் கையில் மீன் உருவத்தினை வரைய இருந்த அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ப்ளூ வேல் விளையாடிய தனது அனுபவங்களை அவர் பாகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

முதலில் ப்ளூ வேல் ஒரு அப்ளிகேஷனோ அல்லது விளையாட்டோ அல்ல.நாம்  தரவிறக்கம் செய்து கொள்வதற்கு. இது தனி நபர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட லிங்க். இது அந்த விளையாட்டினை நிர்வகிக்கும் அட்மினால் நமக்கு அனுப்பப்படும்.

முக்கியமாக நமக்கு வழங்கப்படும் அனைத்து டாஸ்க்குகளும் அதிகாலை 2 மணிக்கு பிறகுதான் செய்யப்பட வேண்டும் என்பது விதி. முதலில் சில நாட்கள் உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளச் சொல்வதாக அமையும், அத்துடன் நீங்கள் அந்தரங்கப் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவை எல்லாம் அந்த அட்மினால் சேகரித்து வைத்துக் கொள்ளப்படும்.

சில நாட்களுக்கு முன்னதாக என்னை நள்ளிரவில் இடுகாடு ஒன்றிற்கு தனியாகச் சென்று அங்கு ஒரு 'செல்ஃபி' எடுத்து அனுப்ப வேண்டும் என்று கட்டளை வந்தது. நான் அருகில் உள்ள அக்கரைவட்டம் இடுகாட்டிற்கு சென்று அங்கிருந்து 'செல்ஃபி'  எடுத்து அனுப்பினேன். 

அத்துடன் தினமும் திகில் படங்களை தனியாக அமர்ந்து பார்க்க வேண்டும் என்பதும் விதிகளில் ஒன்றாகும். உங்களுக்குள் இருக்கும் பயத்தினை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது.

இதன் காரணமாக நான் வீட்டில் உள்ள மற்றவர்களுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்து விட்டேன். தனியாக அடைந்தே கிடந்தேன். இது மனரீதியாக கடும் பாதிப்பினை உருவாக்கியது. இந்த விளையாட்டிலிருந்து விடுபட வேண்டும் என்று நானே நினைத்தாலும் என்னால் முடியவில்லை.   

இது ஒரு மெய்நிகர் சாவுக் கூண்டு போன்றது. இது தாங்க இயலாத ஒரு அனுபவம்.சாகசத்தினை விரும்பி இதனைச் செய்யலாம் என்று நினைப்பவர்கள் கூட இதனால் கண்டிப்பாக மனரீதியில் பாதிக்கும்.   

ஆலோசனை நிகழ்வுகளுக்குப் பிறகு தற்பொழுது நான் சரியாக இருக்கிறேன். என்னைப் போன்ற இளைஞர்கள் அல்லது மாணவர்கள் யாரும் அந்த ஆபத்தான விளையாட்டினை முயல வேண்டாம்.

இவ்வாறு அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com