பாஜக ஆட்சியை அகற்ற ஒன்றிணைவோம்: தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

மத்திய பாஜக ஆட்சியை அகற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முரசொலி பவள விழாவில் பேசுகிறார் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன். உடன்(இடமிருந்து) ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), துரைமுருகன் (திமுக), மு.க.ஸ்டாலின், கி.வீரமணி (தி.க.),
முரசொலி பவள விழாவில் பேசுகிறார் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன். உடன்(இடமிருந்து) ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), துரைமுருகன் (திமுக), மு.க.ஸ்டாலின், கி.வீரமணி (தி.க.),

மத்திய பாஜக ஆட்சியை அகற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முரசொலி நாளிதழின் 75-ஆவது ஆண்டு பவளவிழாப் பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: எந்தக் கொள்கைக்காக முரசொலி பாடுபட்டதோ அந்தக் கொள்கைக்கு ஆபத்து வந்துள்ளது. மாநில சுயாட்சிக்கு, சமூக நீதிக்கு, மாநில உரிமைகளுக்கு ஆபத்து வந்துள்ளது. நாம் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்திருக்கலாம், கொள்கையில் மாறுபாடுகள் வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அப்புறப்படுத்த...மதவாதத்தை இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் பரப்ப வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. குறிப்பாக, அதிமுக பிளவைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது. எட்டாத கனிக்கு பாஜக கொட்டாவி விட வேண்டாம். எனவே, தமிழகத்தைக் காப்போம், வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்ட இந்தியாவைக் காக்க உறுதி எடுப்போம். இது மோடி ஆட்சியில்லை, மோசடி ஆட்சி.
இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராவோம். பாஜகவுக்கு அடிபணிந்து தமிழக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ, நிச்சயம் வீழ்ச்சியடையும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர்: தமிழகத்தை ஆளும் அரசு தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்று கூறுகிறது. அவ்வாறு இருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ: முரசொலி நான் பெற்றெடுத்த முதல் குழந்தை என்றார் கருணாநிதி. முரசொலிக்கு நூற்றாண்டு விழா நடக்கும்போது உலகத் தமிழர்கள் அனைவரும் வந்து வாழ்த்துவார்கள். கருணாநிதி 100 ஆண்டுகள் கடந்து, பன்னூறு அகவை கண்டு வாழ வேண்டும். மீண்டும் கருணாநிதி உரையாற்றுவதை தமிழ்ச் சமூகம் காண வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: மிசா காலத்தில் கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாசாலையில் தன்னந்தனியாக நின்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் கருணாநிதி. இன்றும் மாநில உரிமைகள்
பறிக்கப்பட்டதால்தான் அனிதா தற்கொலை, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றம், நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பு போன்ற பிரச்னைகள் எல்லாம். இந்தச் சூழலில் கருணாநிதியின் நெஞ்சுரத்தோடு சமூக நீதி காக்க மாநில உரிமைகளைக் காக்க, ஜனநாயக் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: இன்று நாட்டில் ஒரு போர் தேவைப்படுகிறது. அதனை நாம் சந்திக்க வேண்டும். வகுப்பு வாத, மதர்சார்பற்ற கொள்கைகளை எதிர்த்துப் போராட தமிழகத்தில் களம் அமைக்க வேண்டும். 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: திராவிட இயக்கங்களை அழித்து விடலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர். ஆனால் அது நடக்காது. கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவை வழிநடத்துவார்.
திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி: பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ. கடந்த முறை முரசொலி பவளவிழாக் கூட்டம் மழையால் நின்றதற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். அதனால்தான் வைகோ இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். பிரிந்தவர்கள் ஒன்றாக இருப்பதைப் பார்த்து தாய்க் கழகத்தினர் மகிழ்ச்சியடைகிறோம்.
வைகோ தன் உணர்வுகளை இங்கே கொட்டினார். வேறு எங்கும் சென்று உணர்வுகளைக் கொட்டாமல் அவர் இங்கேயே இருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வைகோ துணை நிற்க வேண்டும்.
மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com