ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றக்  கிளை தடை! 

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக்  கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றக்  கிளை தடை! 

மதுரை:       ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக்  கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ - ஜியோ நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது.

இது தொடர்பாக அமைச்சர்கள் குழு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆனால் அதில் ஒரு பிரிவினர் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற  கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்த உத்தேசித்துள்ள வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

மொத்தமாக 12 லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன் காரணமாக அரசு சார்ந்த பல்வேறு செயல்பாடுகள் முடங்கும் அபயம் உள்ளது.

இவ்வாறு அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியதாவது:

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை தங்களது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. அதில் குறிப்பாக மருத்துவம், கல்வி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் பணிபுரிவோர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. அதிலும் ஆசிரியர்களே இந்த போராட்டத்தில் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்கது.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கினை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com