அனிதாவின் தற்கொலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மெரீனாவிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கோஷம் எழுப்பிய இந்திய மாணவர் சங்கத்தினர்.
அனிதாவின் தற்கொலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மெரீனாவிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கோஷம் எழுப்பிய இந்திய மாணவர் சங்கத்தினர்.

நீட் எதிர்ப்பு போராட்டம்: சென்னையில் தொடரும் போராட்டங்கள் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் 33 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் 6,500 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் 33 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் 6,500 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்கும் வகையிலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் கடந்த 2 -ஆம் தேதி முதல் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா நினைவிடத்தில்... ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் இந்த போராட்டம் நீடித்தது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 27 மாணவர்கள் புதன்கிழமை நண்பகல் வந்தனர்.
அவர்கள், ஜெயலலிதாவின் சமாதி முன் அமர்ந்து, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதையடுத்து போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸார், மாணவர்களை ஜெயலலிதா சமாதி இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற்றி, கைது செய்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில், போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
கல்லூரியில்... இதேபோல், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, வாயில் கறுப்பு துணியை கட்டிக் கொண்டு கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டை புதுக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, பாரிமுனை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, வண்ணாரப்பேட்டை தியாகராஜா கல்லூரி, துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி உள்ளிட்ட சென்னையில் உள்ள முக்கியமான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்... இதில், கிண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், திருவொற்றியூரில் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் சாலை மறியல், முற்றுகை போராட்டம், தர்னா போராட்டம் என 5 இடங்களில் அனுமதியின்றி 200 போராட்டம் நடத்திய, சுமார் 200 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம், நினைவஞ்சலி நிகழ்ச்சி என 28 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 6,215 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். கடந்த நான்கு நாள்களாக நடைபெற்ற போராட்டங்களை அரசியல் கட்சியினரே பிரதானமாக நடத்தினர். ஆனால் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களை கல்லூரி மாணவர்களே முன்னின்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில் வலுக்கும் போராட்டம்
மாணவி அனிதா தற்கொலையைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவ,மாணவிகள் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 70 பேர் கொட்டும் மழையிலும் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இதேபோல், அனிதாவின் சொந்த ஊரான செந்துறையை அடுத்த குழுமூரில் 5 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com