அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க பொதுக்குழுவில் திட்டமா?

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க பொதுக்குழு கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில்
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க பொதுக்குழுவில் திட்டமா?

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க பொதுக்குழு கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கொரியர் பதிவி தபால் மூலம் அனுப்பப்படும் அழைப்பு கடிதத்தால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறது அதிமுக அணிகள் பிளவுபட்டு இருந்த நிலையில், தினகரன் முதல்வர் பழனிசாமி அணியினரால் விலக்கப்பட்டார். இந்நிலையில், தனித்தனியாக இருந்த பன்னீர்செல்வம் அணியும், பழனிசாமி அணியும் கடந்த 21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இணைந்தன. இணைந்த இரு அணிகளும் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்கி வைக்க முடிவெடுத்தனர்.

இதற்கு எதிர்பு தெரிவித்த தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். இதையடுத்து அவர்கள் 19 பேரும் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என தங்களது ஆதரவு விலகல் கடிதத்தை தனிதனியாக அளித்தனர்.

இதையடுத்து பழனிசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. எதிர்கட்சிகளும் பெரும்பான்மை இழந்த பழனிசாமி அரசு பதவி விலக் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வந்தனர்.

இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ, எம்பி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 108 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமியின் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாகவும், வரும் செப்.12-ஆம் தேதி கூடும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அளித்தனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதா உயிரிழந்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, போராட்டம், அரசியல் கட்சிளின் போராட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தின் தடை என நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலை மற்றும் அதிமுகவில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில், முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் 12-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில், சுமார் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுக்கான அழைப்பு கடிதம் கொரியர் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு வரும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கவருடன் கூடிய அழைப்பிதழை உடன் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு முறையும் இல்லாத வகையில், இந்த முறை பொதுக்குழு உறுப்பினர்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “அழைப்பு கடிதம் கிடைத்துவிட்டதா?, கடிதத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு வருகிறார்களாம்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 05.12.2016 அன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்த நிலையில், நாம் 29.12.2016 அன்று நடைபெற்ற அவசர பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் சட்ட திட்ட விதி 20 (2)-ன்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை வி.கே.சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரால், பொதுச் செயலாளராக செயல்படாதநிலை ஏற்பட்டுள்ளதால், எம்.ஜி.ஆரால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சியின் சட்ட திட்ட விதி 20 (5)-ன்படி ஒன்று கூடி கட்சியை வழிநடத்தி வருகிறோம்.

இந்த நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒருபகுதி எண்ணிக்கையினர், பொதுக்குழு கூட்டத்தை கட்சி சட்ட திட்ட விதி 19 (7)-ன்படி உடனடியாக கூட்டுமாறு தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விண்ணப்பித்ததின் அடிப்படையில் இப்பொதுக்குழுவானது கூட்டப்படுகிறது.

கட்சியின் சட்ட திட்ட விதி 19 (7)-ன்படி ஓராண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்ட வேண்டும் என விதி உள்ளதாலும், கடந்த 2016-ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் இன்னும் கூட்டப்படாத நிலையில் உள்ளதாலும், இப்பொதுக்குழுவானது 12.09.2017 செவ்வாய்கிழமை அன்று காலை 10.35 மணிக்கு கூட்டப்பட உள்ளது. கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்திற்கு தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று அந்த அழைப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட தடைக்கோரி டிடிவி தினகரன் ஆதரவாளரும் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் சார்பில் மூத்த வழக்குரைஞர் டி.வி. ராமானுஜம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இது மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை (செப்.11) விசாரணை வரும் என தெரிகிறது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய,மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலம் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, சென்னையில் சனிக்கிழமை நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக டிடிவி தினகரன் சுட்டுரை பக்கத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com