நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தி திமுக
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தி திமுக செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து பேசினார்.

ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உடனடியாக பேரவையை கூட்டுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாகவும், முதல்வரை மாற்றக்கோரி தனித்தனியாக கடிதம் அளித்துள்ளனர். மேலும் 3 அதிமுக எல்எல்ஏக்கள் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆதரவாக 114 எல்எல்ஏக்களும், எதிராக 119 எல்எல்ஏக்களும் உள்ளனர். இந்த கணக்கை ஆளுநரிடம் எடுத்து கூறியுள்ளோம். பெரும்பான்மை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஒரு வாரத்தில் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடுவார் என்று நம்புகிறோம். அப்படி பேரவையை கூட்ட உத்தரவிடாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் இந்த விவகாரத்திற்காக ஆளுநரை சந்திப்பது இதுவே கடைசி என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள வங்கியில் அமைச்சரின் பினாமி ஒருவர் ரூ.246 கோடியை வங்கியில் செலுத்தி உள்ளார். டெபாசிட் செய்யப்பட்ட ரூ.246 கோடி பணம் யாருடையது என்று விசாரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவரையும் சந்தித்து திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து மனு அளித்தனர். இதனிடையே இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்த பழனிசாமி ஆட்சிக்கு எதிரான உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. எனவே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

நாளை சபாநாயகர் தனபாலை, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே, சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். ஆளுநரும், சபாநாயகரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், வேலு, பொன்முடி, காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, ஐயுஎம்எல் அபுபக்கர் உள்ளிட்டோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட மீண்டும் வலியுறுத்த வந்ததை அடுத்து ஆளுநர் மாளிகையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com