ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு திமுக துணை நிற்கும்: மு.க. ஸ்டாலின்

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக செயல் தலைவரும், எதிரிகட்சி
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு திமுக துணை நிற்கும்: மு.க. ஸ்டாலின்


சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக செயல் தலைவரும், எதிரிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் தங்களுக்கு “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்”, “ஊதிய முரண்பாடுகளை களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்”, “இடைக்கால நிவாரணமாக 20 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும்”, “தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிவோருக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்”, என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டக் களம் கண்டுள்ளது.

அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையிலும், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம் என அறிவித்துள்ளனர். அரசு இயந்திரம் சுழல்வதற்கு அச்சாணியாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அதுபோலவே ஆசிரியர்களும் கல்விக் கண்களாக விளங்குபவர்கள். இவ்விரு தரப்பினரின் கோரிக்கைகளை செயல்படுத்துவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது குதிரைபேர பினாமி அரசு.

அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடும் அவலநிலை உருவாகி வருகிறது. எஸ்மா - டெஸ்மா போன்ற சட்டங்களை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் அதிமுக ஆட்சியில்தான் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெண்கள் என்றுகூடப் பாராமல் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து ‘நைட்டியுடன்’ கைது செய்த கொடுஞ்செயல் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. ஒரே உத்தரவில் ஒரு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சர்வாதிகார நடவடிக்கை அதிமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது. இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு எல்லாம் அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குரிமை மூலம் அதிமுகவிற்கு தக்க பதிலடி கொடுத்தும், இன்னும் அந்தக் கட்சியின் தலைமையில் உள்ள ‘குதிரை பேர’ அரசு சற்றும் திருந்தவில்லை.

இப்போதாவது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்து, அரசு நிர்வாகம் முடங்காமலும், பொதுமக்கள் மேலும் அவதியுறாமலும் விரைந்து செயல்படவேண்டும் எனக் கோருகிறேன். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு தி.மு.கழகம் துணை நிற்கும். பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற போராட்டங்களை கையாளும் தகுதியோ, திறமையோ இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் வீட்டுக்கு செல்வதே அனைத்து தரப்பினருக்கும் நல்லது. தமிழகத்தில் விரைவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனும் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com