எடப்பாடிஅரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்: ஆளுநரிடம் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்துக்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை  சந்தித்து மனு அளிக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் திமுக முதன்மை செயலர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளிக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் திமுக முதன்மை செயலர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்துக்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை, நிரூபிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் எதிர்க் கட்சிகளின் குழு ஆக.27-ஆம் தேதி தமிழக ஆளுநரைச் சந்தித்து இதுதொடர்பான விரிவான மனுவை அளித்தனர்.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சித் தலைவர்கள் ஆக.30-ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கூறி, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட்டனர்.
மீண்டும் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், பொன்முடி, வேலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ள காரணத்தால், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்திருக்கிறது. மேலும் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது 21 ஆக உயர்ந்திருக்கிறது.
சட்டப்பேரவையில் திமுகவைப் பொருத்தவைர 89 சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸூக்கு 8 சட்டப்பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என மொத்தம் எதிர்க் கட்சி வரிசையில் 98 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனுடன், அதிருப்தி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், மொத்தம் 119 உறுப்பினர்கள் இந்த அரசுக்கு எதிராக உள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஆர்.கே. நகர் இடம் காலியாக உள்ள நிலையில், இப்போது 114 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே அதிமுக அரசு பெற்றிருக்கிறது. இந்த எண்ணிக்கையைத்தான் ஆளுநரிடம் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
ஏற்கெனவே, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் ஆளுநரின் சட்ட கடமை குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், சட்டப்பேரவையைக் கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
இந்த விவகாரத்துக்காக ஆளுரை நாங்கள் சந்திப்பது இதுதான் கடைசி முறை. சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுக்கவில்லை எனில், சட்ட ரீதியில் நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்றார்அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com