வீட்டிலேயே இருக்கலாமே. . . தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு நீதிபதி யோசனை

பொதுக்குழுவுக்கு அழைப்பு வந்தால் அதனை நிராகரித்துவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை கூறினார்.
வீட்டிலேயே இருக்கலாமே. . . தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு நீதிபதி யோசனை


சென்னை: பொதுக்குழுவுக்கு அழைப்பு வந்தால் அதனை நிராகரித்துவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியினரின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் மனு தாக்கல் செய்த வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியின் பொதுக் குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தொடர்ந்த மனுவில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு உரிமையில்லை என்று கூறியிருந்தார்.

மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்குத் தொடர்ந்த எம்எல்ஏ வெற்றிவேலுக்கு சில யோசனைகளையும் வழங்கினார்.

அதாவது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியதற்கு பதில் தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கலாமே என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பொதுக்குழு குறித்து யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அழைப்பு விடுக்கப்பட்டால் நோட்டிஸை நிராகரித்துவிட்டு வீட்டிலேயே இருக்கலாமே.

அல்லது பொதுக்கூட்டத்துக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்காமல் வெறுமனே சாப்பிட்டுவிட்டும் வரலாம். அல்லது வீட்டிலேயே இருக்கலாம். 

அதிமுக அம்மா அணியும், புரட்சித் தலைவி அம்மா அணியும் இணைந்து நடத்தும் பொதுக்குழுவில் உங்கள் அணியும் கலந்து கொள்ளலாமே என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும், பொதுக்குழுவை கூட்ட தடை கோரி வெற்றிவேல் என்பவர்  தனிப்பட்ட முறையில்தான் வழக்குத் தொடர்ந்துள்ளார். எனவே, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் மனு தாக்கல் செய்ததற்காக வெற்றிவேலுவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com