அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை இரவு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை இரவு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
இன்று பொதுக் குழுக் கூட்டம்: சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.12) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளதால்... இந்த வழக்கின் விசாரணை தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிவேல் தரப்பில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான சசிகலாவுக்கே உண்டு. இந்நிலையில் செப்.12-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு நிர்வாகி என்ற பெயரில் உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக யாருக்குச் சொந்தம் என்ற விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்தக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
ரூ.1 லட்சம் அபராதம்: தடை விதிக்கக் கோரி தனிநபராக வந்தது ஏன் என்றும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழக்குத் தொடர்வது என்றால் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது எனக் கூறிய நீதிபதி மனுதாரரின் மனுவில் நான்காவது எதிர்மனுதாரராக டிடிவி தினகரனையே சேர்த்துள்ளார். இது உள்நோக்கம் கொண்டது என்றும் மனுதாரர் விரும்பினால் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கூட்டத்துக்குச் செல்வதைத் தவிர்த்து விடலாம். எனவே, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகக் கூறி நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
மேல் முறையீட்டு மனு: இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு விசாரணை ராஜீவ் ஸக்தர், அப்துல் குத்தூஸ் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது வெற்றிவேல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அதிமுக அம்மா, புரட்சித்தலைவி அம்மா என்ற பெயர்களில் கட்சியே இல்லை. அப்படி இருக்கும்போது பொதுக் குழுவுக்கு எப்படி அழைக்க முடியும்? தேர்தலுக்காக வழங்கப்பட்ட பெயர்களைக் கொண்டு பொதுக் குழு கூட்டப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் செயல் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை ஏன் அணுகவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், கட்சி, சின்னம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தங்களுக்கே உள்ளது. இரு அணிகள் இணைந்ததைத் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் பொதுச் செயலாளர் இல்லாதபோது முடிவெடுக்கும் அதிகாரம் துணைப் பொதுச் செயலாளருக்கே உள்ளது. ஆனால், அந்த இருவருக்குமே பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து எதிர்த்தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், டிடிவி தினகரன் பொதுக்குழு உறுப்பினரே இல்லை. மேலும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அணிகள் இணைப்புக் குறித்துப் பேசுவதற்காகவே தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சசிகலா நியமனம் தொடர்பான அறிவிப்பும் இதே தலைமைக் கழகத்தின் பெயரால்தான் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மதிக்கவே அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா ஆகிய பெயர்களை அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தியுள்ளோம். அவ்வாறு இருக்கும்போது மனுதாரர் ஏன் தேர்தல் ஆணையத்தை நாடாமல் நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடர்ந்தார்? பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில் மனுதாரர் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம் என்றார்.
இணைப்பை ஏற்க முடியாது: அதற்கு பதிலளித்த வெற்றிவேல் தரப்பு வழக்குரைஞர், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்குத் தெரிவிக்காமல் நடத்தப்பட்ட இணைப்பு என்பதை இணைப்பாகக் கருத முடியாது. இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திட்டார்கள் என விளக்கமும் அளிக்கவில்லை. தலைமைக் கழகம் என்பது அதிமுகவுக்கானதுதான். அம்மா அணிக்கோ அல்லது புரட்சித் தலைவி அம்மா அணிக்கோ சொந்தமானது அல்ல. கூட்டம் நடத்துவது என்றால் அதிமுகவின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என வாதிட்டார்.
அக்டோபர் 23-க்கு வழக்கு ஒத்திவைப்பு: இதைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து, பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்து வழக்கை வரும் அக்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com