பொதுக்குழு அல்ல; சாதாரண கூட்டம்தான்

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நடத்தியது கட்சியின் பொதுக்குழு அல்ல; அது சாதாரண கூட்டம் தான்.
பொதுக்குழு அல்ல; சாதாரண கூட்டம்தான்

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நடத்தியது கட்சியின் பொதுக்குழு அல்ல; அது சாதாரண கூட்டம் தான். அங்கு நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் வி.கே.சசிகலாவுக்கு மட்டுமே பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளது. இல்லையெனில் அவரது அனுமதியின்பேரில் துணைப் பொதுச் செயலர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தியது கட்சியின் பொதுக் குழு அல்ல. அது ஒரு சாதாரண கூட்டம் தான். ஆகவே, அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்துள்ள உயர்நீதிமன்றம், அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது என கூறியிருக்கிறது. அக்டோபர் 23 இல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதைப் பொருத்துதான் தீர்மானம் செல்லுபடியாகுமா, இல்லையா என்பது தெரியவரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுச் செயலராக இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை என்கின்றனர். ஆனால், அவர்கள்தான் சசிகலாவை பொதுச் செயலராகத் தேர்வு செய்தனர். இப்போது தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா வழியிலான ஆட்சியல்ல. அவர் அமர்ந்திருந்த முதல்வர் சிம்மாசனத்தில் வேறு யாரையும் பார்க்க அதிமுக தொண்டர்களுக்கோ, பொதுமக்களுக்கோ விருப்பம் இல்லை. பழனிசாமி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்தவர் பன்னீர்செல்வம். தற்போது இருவரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர். அவர்களுக்கு இத்தகைய வாய்ப்பை அளித்த ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு இருவரும் துரோகம் செய்துள்ளனர். 
கொள்கைகளை விட்டுகொடுத்த அரசு: இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பொதுமக்களும், 95 சதவீத அதிமுக தொண்டர்களும் விரும்புகின்றனர். நான் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் இதை வலியுறுத்துகின்றனர். இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடமாக இருந்த நீட் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கொள்கைகளை இப்போதைய அரசு விட்டுக் கொடுத்துவிட்டது. பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் தான் அக்கறை செலுத்துவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர். ஆகவே, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்கிவிட்டேன்.
திமுகவுக்கும் எங்களுக்குமே போட்டி: எங்களது நிலைப்பாடு சரி என்பதை மக்களும், அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், திமுகவுடன் கைகோர்த்து செயல்படுவதாக ஒரு சில அமைச்சர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பவர்கள் முழுமனதுடன் அங்கு இல்லை. விரைவில் இந்த அரசு கவிழும். அங்கு இருப்பவர்கள் எங்களோடு வருவது உறுதி. தேர்தலில் எங்களுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி இருக்கும். அதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம். 
ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரட்டை இலையை மீட்போம் என்று தீர்மானம் போட்டுள்ளனர். ஆனால், சின்னம் முடக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே ஓ.பன்னீர்செல்வம் தான் என்பதை மறந்துவிட்டனர். எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்குவதை சில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் விரும்பவில்லை. அவர்களை நாங்கள் தான் சமாதானப்படுத்தினோம். ஆனால், அதையெல்லாம் அவர் மறந்துவிட்டார். தனக்கு பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற நிலையில் அவராகவே ராஜினாமா செய்து, தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்போது உண்மையான அதிமுக யார் என்பது தெரிந்துவிடும். அதற்கு முதல்வர் பழனிசாமி தயாராக இல்லை.
இதனால் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தோம். இச்சூழலில் முதல்வரை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வது அல்லது பேரவைத் தலைவரிடம் பேரவையைக் கூட்ட அறிவுறுத்துவது ஆளுநரின் கடமை. அதை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். இல்லையெனில் இன்னும் இரு நாள்களில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு எந்த முடிவையும் எடுக்க எங்களது தரப்பில் உள்ள 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தயாராக இருக்கின்றனர். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழியில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com