மிரட்டும் தமிழக காவல்துறை: கூர்க் காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி புகார்! 

விடுதியில் தங்கியிருக்கும் தங்களை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை மிரட்டுவதாக, டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மிரட்டும் தமிழக காவல்துறை: கூர்க் காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி புகார்! 

கூர்க்:விடுதியில் தங்கியிருக்கும் தங்களை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை மிரட்டுவதாக, டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவில் இரு அணிகளாக இருந்து செயல்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியஇருவரும் சமீபத்தில் ஒன்றாக இணைந்தனர். உடனே அதிமுக அம்மா அணியின் துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் ஒன்றிணைந்து,முதல்வர் பழனிசாமி மீது தாங்கள் நம்பிக்கையிழந்து விட்டதாக கூறி ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் குடுத்தனர்.

ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே தனது ஆதரவாளர்களை அனைவரையும் டிடிவி தினகரன் முதலில் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்திருந்தார். பின்னர் அங்கிருந்து அனைவரும் கிளம்பி தற்பொழுது கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள  தனியார் விடுதியில் தமிழக காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

முதலில் கோவை பதிவு எண் கொண்ட இரண்டு டெம்போ டிராவலர்கள் மற்றும் ஒரு டாடா சுமோ ஆகிய வாகனங்களில் போலீசார் அங்கு வந்துள்ளனர். அனைவரும் போலீஸ் சீரூடை இல்லாமல் சாதாரண உடை அணிந்து வந்துள்ளனர்.

நேரடியாக அவர்கள் விடுதியின் உள்ளே சென்று விசாரணை செய்தனர். உள்ளேயிருக்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் காரணமாகத்தான் அங்கே தங்கி உள்ளார்களா என்பதை போலீசார்  நேரடியாக விசாரித்ததாகத் தெரிகிறது. 

இந்நிலையில் இன்று காலை அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு, கர்நாடக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடுதியில் தமிழக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள தகவலை ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இங்கு நாமக்கல் ஒப்பந்தராரர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில், தமிழக முன்னாள் உயர் கல்வித் துறைஅமைச்சர் பழனியப்பன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன் எதிரொலியாக கூர்க் விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூர்க் கண்டி கொப்பா காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் ஒப்பந்தராரர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு உள்ள தொடர்பு குறித்து கூறுமாறு, விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை மிரட்டுவதாகவும், எனவே இது குறித்து விசாரித்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com