அரசியல் களத்தில் ரஜினி விரும்பினால் இணைந்து செயல்பட தயார்: கமல்ஹாசன்

அரசியல் களத்திற்குள் நுழையத் தயார் என்ற கமல்ஹாசன், ரஜினி விரும்பினால் அணியில் இணைந்து செயல்படவும் தயார் என தெரிவித்தார்.  
அரசியல் களத்தில் ரஜினி விரும்பினால் இணைந்து செயல்பட தயார்: கமல்ஹாசன்

சென்னை: அரசியல் களத்திற்குள் நுழையத் தயார் என்ற கமல்ஹாசன், ரஜினி விரும்பினால் அணியில் இணைந்து செயல்படவும் தயார் என தெரிவித்தார்.  

தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்கு, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த "யாதும் தமிழே' விழாவில் "தமிழ் திரு' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தனது நான்காவது நிறைவையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் நடத்திய விழாவில் தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர் கி. ராஜநாராயணன், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், கல்வியாளர் பிரபா கல்விமணி, விஞ்ஞானி என். வளர்மதி ஆகியோருக்கு ஆந்திரா தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து "தமிழ் திரு' விருதுகளை வழங்கினார்.

தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அனைத்து விவசாயச் சங்கங்களின் தலைவர் பி.ஆர். பாண்டியன், நீதிபதி அரி பரந்தாமன் ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட குழு விவாதம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் விவசாயம், அரசியல், இறை நம்பிக்கை உள்ளிட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்தார்.

மேலும், கேரள முதல்வரை அண்மையில் சந்தித்தது போல மேலும் பல முதல்வர்களை சந்திப்பேன் என்றும், நடிகர் ரஜினிகாந்திற்கும், தமக்கும் தொழில் ரீதியிலான போட்டி இருந்தாலும், முக்கிய பிரச்சினைகளில், இருவரும், ஒருவரையொருவர் சந்தித்து ஆலோசிப்பது வழக்கம்.

ரஜினி உள்ளிட்ட ஏனைய பலருடனும் அரசியல் குறித்து கலந்து ஆலோசிப்பேன் என்றும் அரசியல் களத்தில் நுழைந்த பிறகு, ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவருடன் இணைந்து செயல்பட தயார் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

அரசியல் குறித்து இப்போது பேசினால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஏன் பேசவில்லை என்ற கேள்வி தன் முன் வைக்கப்படுவதாகவும், அப்போது, ஊரே பேசவில்லை என்பதால், ஊரோடு கூடி வாழ்ந்த தாமும் பேசவில்லை என கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

இருப்பினும், இனிமேலும் அரசியல் பேசாமல் இருப்பது நல்லது இல்லை என்ற அடிப்படியிலேயே, கருத்துகளை தெரிவித்து வருவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் எனது வாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com