அடையாள அணிவகுப்புக்காக சிறைகளில் சிறப்பு அறைகள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் அடையாள அணிவகுப்பு நடத்த, ஒருவழிப் பார்வை கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சிறப்பு அறைகளை 6 மாதத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்
அடையாள அணிவகுப்புக்காக சிறைகளில் சிறப்பு அறைகள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் அடையாள அணிவகுப்பு நடத்த, ஒருவழிப் பார்வை கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சிறப்பு அறைகளை 6 மாதத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூரில் காது கோளாத பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த பள்ளியின் தாளாளரை போலீஸார் கடந்த மே மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி பள்ளியின் தாளாளர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பி.என்.பிரகாஷ், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது போலீஸார் இன்னும் கிடைக்கவில்லை என பதிலளித்தனர்.
அப்போது குறுக்கிட்ட வழக்குரைஞர்கள், "மரண வாக்குமூலம், ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் அடையாள அணிவகுப்பு ஆகியவற்றை ஒரு குற்றவியல் நடுவர் பதிவு செய்தால், அது தலைமை குற்றவியல் நடுவருக்கு அனுப்பி, பின்னர் அந்த அறிக்கை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அவரிடம் விண்ணப்பித்துதான் அந்த அறிக்கையை விசாரணை அதிகாரி பெறமுடியும். இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதால் அந்த அறிக்கை போலீஸாருக்குக் கிடைக்கவே சுமார் ஒரு மாதத்துக்கு மேலாகி விடுகிறது. அதற்குள் குற்றவாளிக்கு பிணை கிடைத்து விடுகிறது' என்றனர்.
இந்த நடைமுறைச் சிக்கல்களைக் களைவது குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் பரிந்துரைத்தார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
புலன் விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 164 -இன்கீழ் சாட்சி மற்றும் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம், மரண வாக்குமூலம், அடையாள அணிவகுப்பின் சான்றளிக்கப்பட்ட நகல்களை இனி சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு குற்றவியல் நடுவர்கள் நேரடியாக வழங்கலாம். ஆனால், அதை வழக்கு முடியும் வரை விசாரணை அதிகாரி வெளியிடக்கூடாது.
அதேபோல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் அணிவகுப்பின்போது, தங்களை அடையாளப்படுத்தும் சாட்சிகளை குற்றவாளிகள் பார்க்க முடியாதபடி, ஒருவழிப் பார்வை கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சிறப்பு அறைகளை சிறைகளில் 6 மாதத்தில் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவை கண்டிப்பாக அனைத்து குற்றவியல் நடுவர்களும் பின்பற்ற வேண்டும். அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த உத்தரவை தமிழில் மொழிப்பெயர்த்து அனுப்ப வேண்டும்.
இந்த உத்தரவின் சுற்றறிக்கையை அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றப் பதிவுத் துறை அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com