இரட்டை இலை சின்னம் யாருக்கு? அக்.31-க்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? அக்.31-க்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதிமுகவில் அணிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்து வந்த இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை திரும்ப பெறுவதற்காக அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சின்னத்தை மீட்பதில் இரு அணிகளும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. எனவே கட்சி நிர்வாகிகளை ஒரே இடத்தில் கூட்டி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் அதிமுக அணிகளின் நிர்வாகிகளுக்கு இடையே தேர்தல் நடத்தி வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, தேர்தல் ஆணையம் முன்பு தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்துவிட்டோம். எப்போது அழைத்தாலும் விளக்கம் அளிக்கத் தயார் என்று தெரிவித்தார்.
இதேபோல வி.கே.சசிகலா தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், சின்னம் ஒதுக்குவது தொடர்பான ஆவணங்கள் சிறையில் உள்ள சசிகலாவிற்கு செப்டம்பர் 13 ஆம் தேதிதான் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றை அவர் படித்து, கையெழுத்திட கூடுதல் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், இரு அணிகள் தரப்பிலும் தேவையான ஆவணங்களை ஜூன் 16 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று ஏப்ரல் 20 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இறுதிகெடு முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும் இரு அணிகளும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இந்த விவகாரத்தில் காலதாமதம் செய்வதில் தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, சின்னம் தொடர்பான விவகாரங்களின் முக்கியத்துவம் உணர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது சமாஜ்வாதி கட்சியில் இதேபோன்று சின்னம் தொடர்பாக பிரச்னை எழுந்தது. அந்த விவகாரம் தேர்தல் ஆணையம் முன்பு ஜனவரி 2 ஆம் தேதி முன்வைக்கப்பட்டது. அதை விசாரித்த தேர்தல் ஆணையம் ஜனவரி 16 ஆம் தேதிக்குள் அப்பிரச்னைக்குத் தீர்வு கண்டது குறிப்பிடத்தக்கது.
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான விவகாரத்தின் விசாரணை மார்ச் 16 ஆம் தேதியே தொடங்கியது. சின்னம் ஒதுக்குவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு இரு அணிகளும் காரணம் என்பது உண்மையே. ஆனால், அதையே ஒரு காரணமாக கூறி தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருவது ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அதற்குள்ளாக இரட்டை இலைச் சின்னத்தை எந்த அணிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும்.
இந்த பிரச்னை தொடர்பாக இறுதி காலக்கெடு ஒன்றை அறிவித்து இரு அணிகளும் அதற்குள்ளாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, தகுதியின் அடிப்படையில் எந்த அணிக்கு சின்னத்தை ஒதுக்குவது என்பது குறித்து அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com