வழக்குரைஞர் சேமநலநிதி ரூ.7 லட்சமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 

வழக்குரைஞர் சேமநல நிதி ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
வழக்குரைஞர் சேமநலநிதி ரூ.7 லட்சமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 

வழக்குரைஞர் சேமநல நிதி ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனைப் பெறுவதற்கு சேவை காலவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தின் 125-வது ஆண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: 
சென்னை உயர் நீதிமன்றக் கட்டடமானது ரூ.12.98 லட்சம் செலவில் இந்தோ-சார்செனிக் முறையில் 1892 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தியாவிலேயே சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம்தான் மிகச்சிறந்தது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் கட்டடக் கலையின் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இங்கு மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்தக் கலங்கரை விளக்கம் மெரீனா கடற்கரைக்கு மாற்றப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் பாரபட்சமின்றி நீதி வழங்கும் அமைப்பாக இன்று வரை செயல்பட்டு வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். நீதியின் வரலாறு, கட்டடக்கலை, சட்ட சாஸ்திரங்களின் பாரம்பரியம் என்ற மூன்று பெருமைகளை சென்னை உயர் நீதிமன்றம் உள்ளடக்கியது.
சேமநல நிதி உயர்வு: சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டுமென வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நிதியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5.25 லட்சமாக உயர்த்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த சேம நலநிதியானது இனி ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதனைப் பெறுவதற்கு சேவை கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
தமிழகத்தில் 47 நீதிமன்றக் கட்டடங்களில் 185 நீதிமன்ற அரங்கங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 கட்டடங்களில் 75 நீதிமன்ற அரங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 20 கட்டடங்களில் 83 நீதிமன்ற அரங்கங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 கட்டடங்களில் 27 அரங்கங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
வரலாற்றுச் சிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம், பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. நீதித் துறையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வுள்ள அரசாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், ஆர்.பானுமதி, சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஹுலுவாடி ஜி.ரமேஷ், ஜி.செல்வம், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com