18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: மூத்த வழக்கறிஞர்களுடன் ஸ்டாலின் 'திடீர்' ஆலோசனை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில்,...
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: மூத்த வழக்கறிஞர்களுடன் ஸ்டாலின் 'திடீர்' ஆலோசனை!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

முதல்வருக்கு எதிராக மனு கொடுத்தது குறித்து செப்டம்பர் 15ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 19 எம்எல்ஏக்களுக்கும் அவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி, முதல்வருக்கு எதிராக மனு கொடுத்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறி விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் அளித்த காலக்கெடுவுக்குள் நேரில் விளக்கம் அளிக்கத் தவறிய 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், அவைத் தலைவர் தனபாலுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் தற்பொழுது மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் திமுக சட்டப்பிரிவு செயலர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனுதாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com