அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது: கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளிலும் அல்லது தனியாக மையங்கள் அமைத்தும் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (டியூஷன்) எடுக்கக் கூடாது
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது: கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளிலும் அல்லது தனியாக மையங்கள் அமைத்தும் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (டியூஷன்) எடுக்கக் கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
இது குறித்த விவரம்:-
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்கள் அரசு சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்ற போதிலும், தங்களது வீடுகளில், மாணவர்களுக்கு தனிப் பயிற்சி வகுப்புகள் (டியூஷன்) நடத்தி வருகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் அந்தந்த வகுப்புகள் மற்றும் இடங்களுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
தொடக்க நிலை வகுப்புகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300 வரையிலும், உயர்நிலை வகுப்புகளுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கணிதம், வேதியியல் என ஒவ்வொரு பாடத்துக்கும் தனியாக மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. 
அதேபோன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் நடத்தும், தனிப்பயிற்சி மையங்களில் காலை மற்றும் மாலைநேரங்களில், மாத சம்பளம் பெற்று பாடம் நடத்துகின்றனர்.
மாதந்தோறும் கட்டணம்: இதன் காரணமாக பிளஸ் 1, பிளஸ் 2 எடுத்து வரும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களும், பத்தாம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் அரசு நிர்ணயித்தபடி பாடங்களை நடத்துவதில்லை என்றும் தாங்கள் நடத்தும் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு வரவழைத்து பாடம் நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும், மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் மாணவர்கள், பெற்றோர் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். 
புகார் அளித்த பெற்றோர்: இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுக்கத் தடை உள்ளது. இதை ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில் மற்றும் தனியாக தனிப்பயிற்சி வகுப்புகள் எடுப்பதைக் கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 
அனைத்துத் துறைகளிலும்...: 
இது குறித்து தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து தனிப்பயிற்சி வகுப்புகள் எடுக்கக் கூடாது என அதிகாரிகள் கூறுவது வரவேற்கத் தக்க ஒன்றுதான். ஏனெனில் இது குறித்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதை மருத்துவத்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் நோயாளிகளை தாங்கள் வைத்திருக்கும் மருத்துவமனைக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கின்றனர். 
மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பெறும் மதிப்பெண்கள், நீட் மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு மருத்துவப்படிப்புகளில் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அத்தகைய முக்கியவத்துவம் வழங்காவிட்டால் பொதுத்தேர்வுகளின் மாணவர்கள் போதிய கவனம் செலுத்த மாட்டார்கள். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசே பயிற்சி மையங்களை ஏற்பாடு செய்து வருவதால் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com