கடப்பாக்கத்தில் மீன்பிடி தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

கடப்பாக்கம் மீனவ குப்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
ஆலம்பரை குப்பத்துக்கு செல்லும் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.
ஆலம்பரை குப்பத்துக்கு செல்லும் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

கடப்பாக்கம் மீனவ குப்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
இதனால், மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாமல் சிரமத்துக்குள்ளாவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் வட்டம், கிழக்கு கடற்கரை சாலையில், கடப்பாக்கத்தை ஒட்டி ஆலம்பரை குப்பம், கடப்பாக்கம் குப்பம், தண்டுமாரியம்மன் குப்பம், ஊத்துக்காட்டான் குப்பம் உள்ளிட்ட பல்வேறு குப்பங்கள் உள்ளன. 
இந்நிலையில்கடப்பாக்கம் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும், ஆலம்பரை குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் முன்விரோதம் காரணமாக கடந்த 1-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், ஆலம்பரை குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களால் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானியின் உத்தரவின்படி, மதுராந்தகம் டி.எஸ்.பி. என்.பி. ராஜேந்திரன் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தீவிர விசாரணைக்குப் பின், 32 பேரில் 29 பேரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மீண்டும் மோதல் சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில், 170 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனால், கடலிலும், ஆற்றுப் பகுதியிலும் மீன் பிடிக்கவும், வெளியிடங்களுக்கு செல்லாதவாறும், அதே சமயம் வெளியாள்கள் யாரும் ஆலம்பரை மீனவர் குப்ப பகுதிக்கோ, ஆலம்பரை கோட்டைக்கோ செல்லாதவாறும் தடுப்புக் கம்பிகளை அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். போலீஸாரின் இந்த கெடுபிடியால் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள 500-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வருவாயின்றி சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
இத்தகைய மோதல் சம்பவம் நடைபெற்று 18 நாள்களாகியும் மீனவர்களை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவோ, வழக்கம் போல கடலில் மீன்களைப் பிடிக்கவோ மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதிக்காமல் உள்ளது.
இதனால், மீனவர்கள் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடுகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை ஆலம்பரை குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மாவட்ட மீனவளத்துறை உதவி இயக்குநரை சந்தித்து, மீண்டும் கடலில் மீன்பிடிக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். 
இதுபற்றி செய்யூர் வருவாய்துறையினருக்கும், சூனாம்பேடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என உதவி மீனவளத்துறை இயக்குநர் உறுதி அளித்தார்.
கடந்த 18 நாள்களாக கிழக்குகடற்கரை சாலையில் இருந்து ஆலம்பரை குப்பம் செல்லும் சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு போலீஸாரின் நடமாட்டம் மட்டுமே உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கடலிலும், அப்பகுதி ஆற்றுப்பகுதிகளிலும் மீன் பிடிக்கவும், மீண்டும் மோதல் சம்பவங்கள் நடக்காதவாறு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com