பேரவைத் தலைவரின் முடிவில் யாரும் தலையிட முடியாது 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் யாரும் தலையிட முடியாது என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
பேரவைத் தலைவரின் முடிவில் யாரும் தலையிட முடியாது 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் யாரும் தலையிட முடியாது என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அணியும் அண்மையில் இணைந்தன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 12-ல் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவது, அவரால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், உதயக்குமார், பி.செங்குட்டுவன், வசந்தி முருகேசன், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து இரட்டை இலை விவகாரத்தில் தங்களது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாதும் என்றும், கட்சி விதிகளின்படி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்படாததால் அதன் தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தனர். 
இந்நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை திங்கள்கிழமை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அதிரடியாக அறிவித்தார். இச்சூழலில், திங்கள்கிழமை மதியம் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் ஆகியோர் தில்லி வந்தனர். முன்னதாக, முன்னாள்அமைச்சர் கே.பி. முனுசாமி, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோரும் தில்லி வந்தனர். இரட்டை இலை சின்னம் மீட்பு தொடர்பாக இவர்கள் சட்ட ஆலோசனை பெறவும், தேர்தல் ஆணையத்தை அணுகுவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் வந்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: 
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகளுக்கு உள்பட்டு, ஜனநாயக அடிப்படையில் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். பேரவைத் தலைவரின் முடிவில் யாரும் தலையிட முடியாது. நான் கூட இதுபற்றி கருத்துச் சொல்வது சரியாக இருக்காது.
வி.கே. சசிகலா, அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் உள்ளிட்டோரை நீக்கிவிட்டு, கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு வழிகாட்டுமுறைகள் வகுக்கப்பட்டு கட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலில் ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளது. இதனால், மாநில அரசின் திட்டங்கள், நிதிகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேசுவதற்கு தில்லி வந்துள்ளோம். மு.க. ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் ஆகிய இருவரும் தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஜெயலலிதாவின் ஆன்மாவின் ஆசி எங்கள் பக்கம் இருப்பதால் அந்தச் சதியை முறியடித்து ஆட்சியை தொடர்ந்து நடத்திச் செல்வோம். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறார். அவரது எண்ணமும் ஈடேறாது என்றார் ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com