மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை: மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
மதுரை கூடல்நகர் அருகில் பொதும்பு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின்  (தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது) தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி(55).  இவர் அப்பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும் மாணவர்கள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.  பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கூறிய தகவலின்பேரில் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மீது கூடல்புதூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2011 மார்ச் 13 ஆம் தேதி, ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியசாமியை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  காவல்துறையினரின் வழக்கு விசாரணையில், தலைமையாசிரியர் ஆரோக்கியசாமியால் 90-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 
 இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் இந்திய மாதர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலர் பொன்னுத்தாய் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
 இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகளும் உள்ளனர். எனவே இந்த வழக்கை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், சாட்சிகளை விசாரிக்க நீதிமன்றத்தில் தனி அறை ஏற்படுத்த வேண்டும், சாட்சிகளின் வீடுகளுக்கு காவல்துறையினர் சீருடை அணிந்து செல்லக்கூடாது, மிக ரகசியமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும், வழக்கு விசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடக்க வேண்டும், இதில் தொடர்புடையவர்களின் எதிர்காலம் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்து கடந்தாண்டு உத்தரவிட்டது.
 இந்த உத்தரவின் பேரில் இந்த வழக்கு கடந்த 2016 நவம்பரில் தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 51 மாணவிகளும், 14 மாணவர்களும் சாட்சி அளித்தனர். இந்த வழக்கில், ஆரோக்கியசாமிக்கு  ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் 25 ஆண்டுகள், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் 30 ஆண்டுகள் என மொத்தம் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை  விதித்து நீதிபதி ஆர். சண்முக சுந்தரம் தீர்ப்பளித்தார். மேலும்  ரூ.12 லட்சத்து 32 ஆயிரத்து 500 அபராதம் விதித்த நீதிபதி, அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து ஆரோக்கியசாமியை நீதிமன்றத்தில் இருந்து மாலை 5.30 மணியளவில் மதுரை மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிலர், முட்டை மற்றும் காலணிகளை ஆரோக்கியசாமி மீது எறிந்தனர். அவர்களிடம் இருந்து போலீஸார் ஆரோக்கியசாமியை மீட்டு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com