மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு: புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களது வீடுகளில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் பி.ஆர். பாபு, மத்திய சேர்க்கைக் குழுத் (சென்டாக்) தலைவர் நரேந்திர குமார், புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநர் ராமன், சென்டாக் அமைப்பாளர் வி. கோவிந்தராஜ், இணை அமைப்பாளர் கே. பஜனி ரட்ஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோனதன் டேனியல், 3 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 4 நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் 2017-18-ஆம் ஆண்டு சேர்க்கைக்காக நடத்தப்பட்ட கவுன்சலிங்கின்போது, தகுதியான மாணவர்களுக்கு புரொவிஷனல் அட்மிஷன் சான்றிதழ்களை சென்டாக் அளித்தபோதிலும், கல்லூரிகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அளிக்காமல், மேற்கண்ட அதிகாரிகள் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். 
அரசு அதிகாரிகளான அவர்கள், தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தனியார் கல்லூரி அதிகாரிகளுடன் சேர்ந்து சதிச் செய்து, மாணவர் சேர்க்கையில் தகுதியான மாணவர்களை ஏமாற்றியுள்ளனர். அதாவது, தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை அளிக்காமல், அந்த இடங்களை தகுதியில்லாத மாணவர்களுக்கு அளித்து, அதற்கு கைமாறாக, அளவுக்கு அதிகமாக பணத்தை வாங்கியுள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைத் தொடர்பான நியமன உத்தரவை சரிவர அமல்படுத்தாமல், தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு அவர்கள் உதவி செய்துள்ளனர்.
மேற்கண்ட முறைகேட்டால், புதுச்சேரியில் தகுதியான 96 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு இவர்களின் சதியே காரணமாகும். தகுதியில்லாத மாணவர்களுக்கு தங்களது கல்லூரிகளில் இடம் அளிப்பதற்கு, மருத்துவக் கல்லூரிகள் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும் பணம் வாங்கியுள்ளன.
சென்டாக் அமைப்பால் புரொவிஷனல் அட்மிஷன் சான்றிதழ்கள் அளிக்கப்பட்ட போதிலும், அந்த சான்றிதழ் கொண்டு சென்ற மாணவர்களில் எத்தனை பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்பட்டுள்ளன என்பதை சென்டாக் தலைவர் நரேந்திர குமார், புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் பி.ஆர். பாபு, சென்டாக் தலைவர் நரேந்திர குமார், புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநர் ராமன் ஆகியோர் உறுதி செய்யவில்லை.
மாணவர்கள் சேர்க்கப்படாததால், 7 மருத்துவக் கல்லூரிகளில் காலியான இடங்களுக்கு 2-ஆவது முறையாக கவுன்சலிங்கும் நடத்தப்படவில்லை. அந்த மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருந்தபோதிலும், அதுதொடர்பான அறிவிப்பை, சென்டாக் இணையதளத்தில் சென்டாக் கவுன்சிலிங் அதிகாரிகள் கோவிந்தராஜ், பஜனிரட்ஜா ஆகியோர் வெளியிடாமல் மறைத்து விட்டனர். 
இதேபோல், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தகுதியான மாணவர்களுக்கு 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இடமளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, மிக அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, சென்டாக் அமைப்பால் சான்றிதழ் அளிக்கப்படாத மாணவர்களுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இடமளித்துள்ளன என்று சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில், 162 இடங்கள் அரசு இட ஒதுக்கீடு கீழும், 156 இடங்கள் கல்லூரிகளின் நிர்வாகத்தின்கீழும் வருகின்றன. இந்த இடங்களில் 2017-18ஆம் கல்வியாண்டுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கு, புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சகம், புதுச்சேரி அரசு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி சென்டாக் அமைப்பால் கவுன்சலிங் நடத்தப்பட்டது. 
இதில் முதல்கட்ட கவுன்சலிங் கடந்த மே மாதம் 4 மற்றும் 11-ஆம் தேதிகளிலும், 2-ஆவது கட்ட கவுன்சலிங் மே மாதம் 19-ஆம் தேதியும் நடத்தப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com