மாநில சுயாட்சியை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: பினராயி விஜயன்

மாநில சுயாட்சியை மீட்க ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார்.
ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்  நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்
ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்  நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்

மாநில சுயாட்சியை மீட்க ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் தொடக்க உரையாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
நாடு விடுதலை அடைந்ததும் மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தது, இதனால் மாநில சுயாட்சி பற்றி பிரச்னை பெரிதாக எழவில்லை. 1957 -இல் முதல் முறையாக கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. ஆனால், இதைப் பொருத்துக் கொள்ளாத அப்போதைய மத்திய அரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 1959 -இல் கேரள அரசை டிஸ்மிஸ் செய்தது. இதுவே இந்தியாவில் மாநில சுயாட்சிக்கு எதிராக நடைபெற்ற முதல் தாக்குதலாகும்.
அதன் பிறகு, அந்தப் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்தே, மாநில சுயாட்சி கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின. நமது அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. 
ஆனால், மத்திய அரசு நினைத்தால் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்துவிடலாம் என்ற நிலையே இன்றும் நிலவுகிறது. பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு புதுச்சேரியில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும், செயல்படுத்தவிடாமல் ஆளுநர் தடுத்து வருகிறார். மாநில சுயாட்சியை, ஆளுநர் பதவி மூலமாக மத்திய அரசு பறித்து வருகிறது. 
அதுமட்டுமல்லாமல், சிபிஐ, உளவுத் துறையை அனுப்பி புதுச்சேரி அரசை பயமுறுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், இந்த மிரட்டல்களுக்கு புதுச்சேரி அரசு ஒருபோதும் பயப்படாது.
ஜி.ராமகிருஷ்ணன்: மத்திய அரசு வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய நிதி ஒதுக்கீடானது, 2010 -11 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதம். ஆனால், 2015 -16 இல் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. 
இவ்வாறு நிதி அதிகாரத்தில் மட்டுமின்றி, நிர்வாக அதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரம் என மாநிலத்தின் அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு பறித்து வருகிறது.
இரா. முத்தரசன்: ஜனநாயகத்தின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை கிடையாது. கல்வி, வரி என மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி மாநில சுயாட்சியை மீட்டெடுக்க, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.
முன்னதாக, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது, ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும், மத்திய அரசின் வரி வருவாயில் 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும், பொதுப் பட்டியல் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மாநில அரசுகளை மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com