மின்னணு குடும்ப அட்டைகளில் குழப்பம்: இணையவழி திருத்த சேவை திடீர் நிறுத்தம்

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கியதில் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, இணைய வழி திருத்தப் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டையின் பின்பகுதியில் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் பதிவிடாமல் விடுபட்டுள்ளது.
விழுப்புரத்தில் வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டையின் பின்பகுதியில் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் பதிவிடாமல் விடுபட்டுள்ளது.

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கியதில் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, இணைய வழி திருத்தப் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வழங்கல் துறையினர் மூலமே திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்த குடும்ப அட்டைகளை மாற்றி மின்னணு குடும்ப அட்டையை அரசு வழங்கி வருகிறது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினர் மூலம் அந்தந்த மாவட்ட, வட்ட வழங்கல் துறை மூலம் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் உள்ள சுமார் 1.6 கோடி குடும்ப அட்டைகளில், தற்போது 1 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 300 குடும்ப அட்டைகள் வரை தயார் செய்யப்பட்டு, வட்ட வழங்கல் துறையினர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, செப்.1 முதல் மின்னணு குடும்ப அட்டைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று, வழங்கல் துறை உத்தரவிட்டது.
இதனால், அவசர கதியில் குடும்ப அட்டைகளுக்கான புகைப்படங்கள், ஆதார் பதிவுகள், தகவல்களை உள்ளூர் நியாய விலைக் கடையினர் மூலம் பெறப்பட்டு, வழங்கல் துறையினர் மூலம் டிஎன்இபிடிஎஸ் இணைய தளங்களிலும், செல்லிடப்பேசி செயலி மூலமும் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதன் பிறகு, மின்னணு அட்டைகள் பெறப்பட்டு தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்திலிருந்து குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டன.
அவற்றில் பெண்களை குடும்பத் தலைவராக நியமித்து, அவர்களின் புகைப்படம் ஒருபுறமும், மறுபுறத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால், பல குடும்ப அட்டைகளில், புகைப்படங்கள் மாறியுள்ளன.
பல இடங்களில் புகைப்படங்களே இல்லாமலும், சினிமா நடிகர்கள், கடவுள் படங்களும் இடம் பெற்றுள்ளன. இதனால், மின்னணு குடும்ப அட்டை பெற்ற பொதுமக்கள் மாநிலம் முழுவதும், நியாவிலைக் கடையினரையும், வழங்கல் துறையினரிடமும் முறையிட்டு வருகின்றனர்.
அவர்கள், மின்னணு குடும்ப அட்டையில் திருத்தப் பணிக்கு, டிஎன்இபிடிஎஸ் இணைய தளத்திலும், செல்லிடப்பேசி செயலியிலும் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் வட்டத்தில் 1.20 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குடும்ப அட்டைகள் பலவற்றிலும் தகவல்கள் முரணாக பதிவிடப்பட்டுள்ளன.
இதனால், பொதுமக்கள் இணைய சேவை மையங்களுக்குச் சென்று, ரூ.50 செலுத்தி மாற்றம், திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இ-சேவை மையங்களிலும் திருத்தப் பணிகள் நடைபெற்றன.
இணையவழி சேவை திடீர் நிறுத்தம்:
இந்த நிலையில், டிஎன்இபிடிஎஸ் இணைய சேவை புதன்கிழமை இரவு முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது சேவை மையங்கள், தனியார் இணைய தள மையங்களுக்குச் சென்று ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி வருகின்றனர். இதனால், வழக்கமான குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், இடம் மாறுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குறித்த காலத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்ற அவசரத்தில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இதனால், 90 சதவீதம் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 சதவீத குடும்ப அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவசரத்தில் படங்களை பதிவேற்றம் செய்ததால் சில இடங்களில் புகைப்படங்கள் மாறியுள்ளன. செல்லிடப்பேசி செயலி, இணைய வழியில் படங்கள் சேர்க்க அனுமதிக்கப்பட்டிருந்ததால், சிலர் தவறுதலாக படங்களை மாற்றி பதிவேற்றம் செய்து, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதைத் தவிர்ப்பதற்கு அரசு தாற்காலிகமாக இணைய வழி சேவையை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வழங்கல் துறை மூலமே படங்கள் திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை கூட்டநெரிசல், சிரமமின்றி மேற்கொள்ள, அரசுத் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாள்களில், மின்னணு குடும்ப அட்டை பதிவேற்றம், திருத்தப் பணிகளை முறைபடுத்த உரிய அறிவிப்புடன் வெளியாகும். அதன் பிறகு பணிகள் நடைபெறும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com