ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு: பிகார் விரைந்தது தனிப்படை

சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், துப்பு துலக்கும் வகையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவின் தனிப்படையினர் பிகாருக்கு சென்றுள்ளனர்.

சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், துப்பு துலக்கும் வகையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவின் தனிப்படையினர் பிகாருக்கு சென்றுள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 8 -ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியின் மேற்கூரையில் துளையிட்ட கொள்ளையர்கள், அதில் கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்த 169 பெட்டிகளில் நான்கினை உடைத்தனர். 
அதில் 16 -ஆவது எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை முழுமையாகவும், 20 -ஆவது எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை பகுதியாகவும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் மொத்தம் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதிய தனிப்படைகள்: சிபிசிஐடி போலீஸார், ரயில் கொள்ளை தொடர்பாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விசாரணை செய்தும் துப்பு துலங்கவில்லை. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக சுமார் 4 ஆயிரம் பேரிடம் விசாரணை செய்தனர்.
ஆனால், சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் துப்பு துலங்காமல் இருந்ததால், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. பி.தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில், ஒரு டி.எஸ்.பி. தலைமையில் புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மேலும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் சிபிசிஐடி இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தது.
பிகார் விரைந்தனர்: இந்த நிலையில், பிகாரைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்தக் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் பிகாருக்கு விரைந்துள்ளனர். 
அங்கு அவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து அந்த மாநில போலீஸாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் மூலம் இவ்வழக்கில் துப்பு துலங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com