ஜெயலலிதா மரணம்: திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுதொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்க விருப்பம் இல்லை. இதேபோல 18 எம்எல்ஏ-க்கள் நீக்கம் சட்டப்படி நடந்துள்ளது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து எதுவும் தெரிவிக்க இயலாது என்றார்.
முன்னதாக நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் அவர் பேசியதாவது: 
அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தற்போது சீரான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இதை கலைக்கும் வகையில் திமுகவினர் பல சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் கைக்கூலியாக அதிமுக மாறி விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். மக்கள் நலத் திட்டங்களை சீரான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் மத்திய அரசுடன் அதிமுக சீரான போக்கை கடைப்பிடித்து வருகிறது.
திமுக ஆட்சியில் இருந்த போது தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளான காவிரி நதிநீர் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவற்றில் மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது. ஆனால், அதிமுக மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து எம்எல்ஏ.க்களும் கூவத்தூரில் காத்திருந்தோம். விரைவில் மக்கள் எதிர்பார்த்தபடி இரட்டை இலை சின்னம் மீட்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com