ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி மனு

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக்

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மனு விவரம்: முதல்வர் எடப்பாடிகே. பழனிசாமிக்கு ஆதரவாக கடந்த பிப்.18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பு: இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களான ஓ.பன்னீர்செல்வம், ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ் மற்றும் ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பை தொகுதி கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான அருண்குமார் கட்சியின் அனுமதியின்றி புறக்கணித்தார்.
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எடப்பாடி கே. பழனிசாமி அரசுக்கு எதிராக அரசு கொறடாவின் உத்தரவை மீறிச் செயல்பட்ட இந்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மார்ச் 20-ஆம் தேதி பேரவைத் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலும் 15 நாள்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து அவர்களைத் தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், 6 மாதங்களுக்கு மேல் ஆன பின்பும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை மாற்ற வேண்டும் என கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு கொறடா ராஜேந்திரன், பேரவைத்தலைவரிடம் புகார் அளித்தார். 
நடுநிலை தவறலாமா? அதன்படி, வெற்றிவேல் எம்.எல்.ஏ. உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் அவர்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பேரவைத்தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். அவர், நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும். 
நாளை விசாரணை: ஆனால், தற்போதைய பேரவைத் தலைவர் இந்த ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார். அவரது செயல்பாடு சட்ட விரோதமானது. எனவே, கடந்த பிப்.18-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும்படி பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என சக்கரபாணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com