பெங்களூரு மேயர் பதவி தமிழருக்கு கிடைக்குமா?

பெங்களூரு மாநகராட்சி மேயராக இந்த முறை தமிழருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சி மேயராக இந்த முறை தமிழருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கர்நாடக மண்ணின் வளர்ச்சிக்கும், கன்னட மொழியின் மேன்மைக்கும் தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு வரலாற்றில் யாராலும் மறைக்க முடியாதது. ஆசியாவின் பிரம்மாண்ட கட்டடமான விதான செளதா எனும் சட்டப்பேரவைக் கட்டடத்தை, மாணிக்கம் முதலியாரும், கர்நாடக உயர் நீதிமன்றக் கட்டடத்தை ஆற்காடு நாராயணசாமி முதலியாரும், கர்நாடகத்தின் முதல் ரயில் பாதையை அண்ணாசாமி முதலியாரும், பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தை சின்னசாமி முதலியாரும் நன்கொடையாகவும், உருவாக்கியும் அளித்தவர்கள்.
கன்னட இலக்கியத்தில் புதிய வரலாறு படைத்தவர்கள் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், கோரூரு ராமசாமி ஐயங்கார், ஜி.பி.ராஜரத்னம் ஆகியோரும் தமிழர்கள். மைசூரு உடையார் அரசாட்சியில் திவான்களாக (தலைமை அமைச்சர்) பணியாற்றியவர் அருணாசல முதலியார், குமரபுரம் சேஷாத்ரி ஐயர், ஆற்காடு ராமசாமி முதலியார் ஆகியோரும் தமிழர்கள். இப்படி, கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழர்களின் எண்ணிக்கை ஏராளம். 
சுரங்கங்கள், பாலங்கள், அணைகள், கட்டடங்கள், சாலைகள் அமைக்கும் பணியில் கர்நாடக மண்ணுக்காக உழைத்த தமிழர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. ஆனாலும், கல்வி, தொழில், அறிவாற்றல், விளையாட்டு, நுட்பம், இலக்கியம் போன்ற எல்லா துறைகளிலும் தமிழர்கள் கோலோச்சி வருவதைக் கன்னட அமைப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே கூறலாம்.
அரசியல் பலம் பெறக் கூடாதா?: நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வதற்காக பெங்களூரு மாநகராட்சியை மூன்று பாகங்களாகப் பிரிக்க கர்நாடக அரசு முடிவு செய்து, அதற்கான சட்டத் திருத்த மசோதாவை கர்நாடக சட்டப் பேரவை, சட்ட மேலவையில் சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்தது. அந்த சட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளைச் சேர்ந்தோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். மாநகராட்சியைப் பிரித்துவிட்டால், தமிழர்கள் அரசியல் ரீதியாக பலம் பெற்று விடுவார்கள் என்று கன்னட அரசியல் பிரமுகர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். தமிழர்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும் பதவியேற்றால், பெங்களூரை தமிழகத்தின் அங்கமாக மாற்ற முயற்சிப்பார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
தமிழர் மேயராகக் கூடாதா?: இந்த நிலையில், வரும் செப். 28-ஆம் தேதி நடக்கவிருக்கும் பெங்களூரு மேயர் பதவிக்கான தேர்தலில் தமிழரான சம்பத் ராஜ் காங்கிரஸ் கட்சிசார்பில் களத்தில் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. பொறியாளரான அவருக்கு, 30 ஆண்டு காலமாக காங்கிரஸில் தீவிரமாகச் செயல்படுபவர், தேவர் ஜீவனஹள்ளி வார்டில் 2 முறை மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என எண்ணற்ற சிறப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், சம்பத்ராஜ் பெயரை முன்மொழிந்துள்ளதற்கே கன்னடர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 
2018-ஆம் ஆண்டில் நடைபெறும் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பெங்களூரில் வாழும் தமிழர்களை ஈர்க்கவே சம்பத்ராஜை மேயராக்க காங்கிரஸ் துடிப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
2015-ஆம் ஆண்டில் இருந்து மஞ்சுநாத ரெட்டி, ஜி.பத்மாவதி ஆகிய இரு தெலுங்கர்கள் மேயர்களாக இருந்துவிட்டனர், மூன்றாம் முறைக்கு கன்னடர் அல்லாத தமிழரை மேயராக்குவதா? என்று கன்னட அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் மொழி சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் மேயர் பதவியை அலங்கரிக்கத் தகுதியற்றவர்களா என்ற கேள்வியை தமிழர்கள் எழுப்புகின்றனர். 
வெளிநாட்டில் கன்னட மேயர்: கடந்த 2010-ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள லேம்பத் மாநகராட்சி மேயராக கன்னடரான நீரஜ் பாட்டீல் பதவியேற்றதும், அவருக்கு கர்நாடகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. உலக அளவில் கன்னடர் ஒருவருக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக பெருமிதம் கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடகத்தின் மண்ணின் மைந்தராக விளங்கும் தமிழர் ஒருவர், பெங்களூரில் மேயராக பதவியேற்கக் கூடாதா? என்பதே தமிழர்களின் கேள்வி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com