தமிழக படகுகளை மீட்க இலங்கைக்கு மீனவர் குழு இன்று பயணம்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 7 படகுகளை மீட்க மீனவர்கள் இலங்கைக்கு புதன்கிழமை புறப்பட்டு செல்கின்றனர்.

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 7 படகுகளை மீட்க மீனவர்கள் இலங்கைக்கு புதன்கிழமை புறப்பட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில் அவ்வப்போது மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். படகுகள் இலங்கை வசமே இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த மாதம் இலங்கை சென்ற போது நல்லெண்ண அடிப்படையில் 33 விசைப்படகுகள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டன. 
இதையடுத்து, இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில், ராமேசுவரத்தை சேர்ந்த 6 விசைப்படகுகள், மண்டபத்தை சேர்ந்த 1 படகு என 7 படகுகளை முதல் கட்டமாக மீட்க முடிவு செய்தனர். அவற்றை மீட்டு வருவதற்காக ராமேசுவரத்தில் இருந்து 6 விசைப்படகுகளில் 48 மீனவர்களும், மண்டபத்தில் இருந்து 1 படகில் 5 மீனவர்களுமாக 7 படகுகளில் 53 மீனவர்கள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை புறப்படுகின்றனர். இவர்களை சர்வதேச கடல் எல்லை வரை இந்திய கடலோர காவல்படை அழைத்துச் சென்று இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்கும். 
இதன் பின் இவர்களை இலங்கை காரைநகர் துறைமுகத்திற்கு கடற்படையினர் அழைத்து செல்ல உள்ளனர். அங்கு படகுகளை பழுது நீக்க முயற்சிப்பர். முடியவில்லையெனில் கட்டி இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளுடன் மீனவர்கள் சென்றுள்ளனர். இந்தக் குழுவுடன், தமிழக மீன்துறை துணை இயக்குநர் ப.ஐசக் ஜெயக்குமார், உதவி இயக்குநர் மா.சிவக்குமார், ஆய்வாளர் மா.கெளதமன் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com